Published : 22 Dec 2021 07:31 AM
Last Updated : 22 Dec 2021 07:31 AM

சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல வசதியாக ஹெலிகாப்டர் சேவை: திருவாங்கூர் தேவசம் வாரியம் திட்டம்

வசதிமிக்க பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஹெலி காப்டரில் வர வசதியாக நிலக்கல் விமானதளத்தை ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங் களுக்கு குத்தகைக்கு விட திருவாங்கூர் தேவசம் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சபரிமலைக்கு அருகே உள்ள நிலக்கல் பகுதியில் திருவாங்கூர் தேவசம் வாரியம் சார்பில் ஏற்கெனவே விமான தளம் அமைக்கப்பட்டது. கொச்சியில் இருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கும் திட்டம் போதுமான வரவேற்பு இல்லாததால் கைவிடப்பட்டது.

இப்போது அந்த விமான தளம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. சபரிமலைக்கு வரும் வசதி மிக்க பக்தர்கள் ஹெலிகாப்டரில் வர வசதியாகவும் சபரிமலை பயணத்தை எளிதாக்கவும் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு திருவாங்கூர் தேவசம் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி, நிலக்கல்லில் உள்ள விமான தளத்தை 3 ஆண்டுகளுக்கு அதிக தொகைக்கு ஏலம் கேட்கும் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட வாரியம் முடிவு செய்துள்ளது. இப்போது ஒருமுறை ஹெலிகாப்டர் தரை யிறங்குவதற்கு வாரியம் ரூ.20,000 வசூலிக்கிறது.

விமானதளத்தை குத்தகைக்கு விடுவதன் மூலம் வாரியத்துக்கு நிதி கிடைப்பதோடு பயணம் எளிதாக இருப்பதால் விஐபிக்கள், வசதி மிக்க பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு வரவிரும்புவார்கள் என்றும் இதன்மூலம் கோயிலுக்கு வருமானம் அதிகரிக்கும் என்றும் தேவஸ்தானம் கருதுகிறது. ஏலம் கேட்பவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x