

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள 'சங்கமா' எனும் திருநங்கைகள் அமைப்பு கடந்த ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், காவல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் திருநங்கைகளை பணியில் அமர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்ற நீதிமன்றம், 'சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி, அரசு பணியில் அமர்த்த வேண்டும்' என உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடக பொது ஊழியர்களுக்கான விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசு பணிகளில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக மாநில காவல் துறை நேற்று வெளியிட்ட அறிவிக்கையில், ''ரிசர்வ் காவல் துறையில் காலியாக உள்ள 70 துணை காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆண்,பெண் மற்றும் திருநங்கைகள் வரும் ஜனவரி 22-க்குள் விண்ணப்பிக்கலாம்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.