

கோச்சடையான் திரைப்பட தயாரிப்பு விவகாரத்தில் நடிகர் ரஜினி காந்தின் மனைவி லதா மீது தனியார் நிறுவனம் தொடுத்த வழக்கை கர்நாடக உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தர விட்டுள்ளது.
''ஆட் பியூரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நேஹார் கடந்த ஜூன் மாதம் பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், '' நடிகர் ரஜினி காந்த் நடித்த 'கோச்சடையான்' திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் நிறுவனம் தயாரித்தது. இதில் நிதி நெருக்கடி ஏற்பட்டதால், ஆட் பியூரோ' நிறுவனத்திடம் ரூ. 6.84 கோடி கடன் பெற்றது. இதற்கு உத்தரவாத கையொப்பமிட்ட லதா ரஜினி காந்த் சில சொத்துகளின் ஆவணங்களை தாக்கல் செய்தார்.
அந்த ஆவணங்கள் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும்''என கோரியிருந்தார்.
இதற்கு பெங்களூரு மாநகர அமர்வு நீதிமன்றம், ''இது தொடர் பாக அல்சூர் கேட் காவல் நிலையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மனுதாரர் கர்நாடக உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடர வேண்டும்''என வழிகாட்டுதல் வழங்கியது.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றம் ''ஆட் பியூரோ'' நிறுவனத் தின் மனுவை கடந்த சில மாதங் களாக விசாரித்து வந்தது. இந் நிலையில் நேற்று முன் தினம் நீதிபதி பிரதீப் டி.வைங்கங்கர் முன் னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, “ஆட் பியூரோ' நிறுவனம், லதா ரஜினிகாந்த் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்'' என உத்தரவிட்டார்.