

புதுடெல்லி: பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் குழந்தைத் திருமணத் தடை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஈரானி அறிமுகம் செய்தபோது திமுக. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெண்களின் திருமண வயதை அதிகரிக்க நிதி ஆயோக் குழுவை அமைத்திருந்தது. ஜெயா ஜேட்லி தலைமையிலான அந்த குழுவில் நிதி ஆயோக் நிபுணர் மருத்துவர் வி.கே.பால், சுகாதார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் ஆகியனவற்றின் உறுப்பினர்கள் இந்த செயற்குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்தக் குழுவின் பரிந்துரைகளின்படியே பிரதமரும் பெண்ணின் திருமண வயதினை உயர்த்துவது தொடர்பாக உறுதியளித்திருந்தார்.
இதனையடுத்து பெண்ணின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தும் யோசனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவாக தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக குழந்தைத் திருமணத் தடை சட்ட திருத்த மசோதா, 2021-ஐ மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இன்று அறிமுகப்படுத்தினார்.
பெண்ணின் திருமண வயதை அதிகரிப்பதால் அவளின் பொருளாதார, சமூக, ஆரோக்கிய மேம்பாடு உறுதி செய்யப்படும், அது குடும்பம், சமூகம், குழந்தைகள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சியினர், பொதுவெளி சமூகத்திடம் ஆலோசனை நடத்தாமல் இந்த மசோதா அவசர அவசரமாக கொண்டு வரப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
திமுக எம்.பி. கனிமொழி பேசுகையில் ‘‘பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தவிர வேறு எந்த ஒரு மசோதாவையும் யாருடனும் கலந்தாலோசிப்பதில் மத்திய அரசுக்கு நம்பிக்கை இல்லை. குழந்தை திருமண தடைச் சட்டத்தில் மாற்றம் செய்ய முயலும் அரசு அதற்கு முன்பாக விரிவான விவாதம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை. மசோதாவை நிலைக்குழு அல்லது தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது மிகவும் முக்கியம், அவர்கள் அதை மறுபரிசீலனை செய்து, சிவில் சமூகத்தின் கருத்துகளைக் கேட்டு, பின்னர் மசோதாவைக் கொண்டு வர வேண்டும்’’ எனக் கூறினார்.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில் ‘‘இது தொடர்ந்து 2வது அல்லது 3வது முறையாக நடைபெறுகிறது. மசோதா குறித்து யாரும் விவாதம் நடத்தாமல் கொண்டு வரப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எந்த யாரும் ஆலோசனை பெறவில்லை. நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் குறித்து முடிவு செய்யும் போது இதனை தெரிவிப்பதில்லை. மாறாக இந்த அரசு திடீரென மசோதவை கொண்டு வருகிறது. மத்திய அரசு செய்யும் இந்த புதிய நடைமுறையை நான் கண்டிக்க விரும்புகிறேன்’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்மிருதி ஈரானி பேசுகையில் ‘‘ஜனநாயக நாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை வழங்குவதில் 75 ஆண்டுகள் தாமதமாகிவிட்டோம். இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் முதன்முறையாக ஆண்களும் பெண்களும் 21 வயதில் சமத்துவ உரிமையை மனதில் கொண்டு திருமணம் குறித்து முடிவெடுக்க முடியும்’’ எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து குழந்தைத் திருமணத் தடை (திருத்தம்) மசோதா, 2021 நிலைக்குழுவுக்கு அனுப்பவது என கோரிக்கையை ஏற்பதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.