Published : 21 Dec 2021 11:00 AM
Last Updated : 21 Dec 2021 11:00 AM

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல்: மம்தா கட்சி அபார முன்னிலை - பாஜக, காங். பரிதாபம்

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி | கோப்புப்படம்

கொல்கத்தா: கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் கட்டமாக 99 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 144 வார்டுகளுக்கும் 4,959 வார்டுகளில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாகக் களம் கண்டன. கொல்கத்தாவில் நடந்த தேர்தலில் 40.5 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். 65 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முடிந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 99 வார்டுகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக 5,4,7,8,9,12,13,14,15 வார்டுகளில் பெரும்பாலான வாக்குகளை திரிணமூல் காங்கிரஸ் பெற்றுள்ளது.

வடக்கு கொல்கத்தாவில் 11-வது வார்டில் போட்டியிட்ட உறுப்பினரும், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளருமான அதின் கோஷ், 13-வது வார்டில் மீண்டும் போட்டியிடும் டிஎம்சி கட்சி வேட்பாளர் அனிந்தியா ரவுத் இருவரும் வெற்றி பெறும் நிலையில் உள்ளனர்.

கொல்கத்தாவின் 22 மற்றும் 23 வார்டில் மட்டும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 45-வது வார்டில் மட்டும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 103, 98வது வார்டிலும் முன்னிலை பெற்றுள்ளன.

பாஜக இந்தத் தேர்தலில் வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் களமிறக்கியுள்ளது. ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உறவினர்களைக் களமிறக்கியுள்ளது. 73-வது வார்டில் முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகள் பவானிபோர் கஜாரி பானர்ஜி போட்டியிட்டுள்ளார். அவர் வெற்றி பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டுநடந்த கொல்கத்தா நகராட்சி தேர்தலில் 114 வார்டுகளில் திரிணமூல் காங்கிரஸ் வென்றது, இடதுசாரிகள் 15 வார்டுகளிலும், பாஜக 6 வார்டுகளிலும், காங்கிரஸ் கட்சி 5 வார்டுகளிலும் வென்றன. ஆனால், சில மாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x