

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் இன்று மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 2 லட்சம் பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநில செய்தித் தாள், காட்சி, அச்சு ஊடகங்களில் எல்லாம் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியின் விளம்பரங்கள் களை கட்டியுள்ளன.
இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு மாதத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார். இன்று 10வது முறையாக அவர் உத்தரப் பிரதேசம் வருகிறார். பிரயாக்ராஜில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதியுதவி வழங்கும் திட்டத்தைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இதனால் 16 லட்சம் பெண்கள் பலனடைவார்கள் என்று தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் இன்று 2 லட்சம் பெண்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதற்கு முன்னர் நடந்த அரச விழாக்களில் பிரதமர் மோடி, அகிலேஷ் யாதவ் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்துப் பேசியது போல் இன்றைய நிகழ்ச்சியிலும் தேர்தல் பிரச்சாரத்தின் வாடை இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
பலன் பெறும் 80,000 சுய உதவிக் குழுக்கள்: தீனதயாள் அந்த்யோதயா யோஜனா மூலம் தேசிய கிராமப்புர வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் 80,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் பிரதமர் தொடங்கிவைக்கும் திட்டத்தால் பலன் பெறவுள்ளன. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் ரூ.1.10 லட்சம் பெறும். இதுதவிர ரூ.15,000 சுழல் தொகையாகப் பயன்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் போது வீடு தேடிச் சென்று நிதிச் சேவை செய்யும் சகிகளுகு ஊக்கத் தொகையையும் பிரதமர் மோடி வழங்கவுள்ளார். இது நேரடியாக அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.
இது தவிர, முதல்வரின் கன்யா சுமங்கலா திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்களுக்கு மொத்தம் ரூ.20 கோடி செலவில் உதவிகள் அறிவிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு அவர்கள் வாழ்வின் பல்வேறு படிநிலைகளிலும் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு பெண் குழந்தையும் ரூ.15ஆயிரம் பெறத் தகுதியாகிறது. பெண் குழந்தை பிறப்பின் போது ரூ.2000, ஓராண்டு தடுப்பூசி நிறைவில் ரூ.1000, ஒன்றாம் வகுப்பு முடித்தால் ரூ.2000, ஆறாம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.2000, 9 ஆம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.3000, கல்லூரி அல்லது டிப்ளமோ படிப்பை முடித்தால் ரூ.5000 விடுவிக்கப்படும். இந்தத் திட்டங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் மேம்பாடு: பிரியங்கா Vs மோடி: உ.பி.சட்டப்பேரவைத் தேர்தலில் 5 கோடிக்கும் மேல் பெண் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குவங்கி தான் பாஜக, காங்கிரஸ் என இருகட்சிகளின் பிரதான குறியாக உள்ளது.
ஏற்கெனவே காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, 40 சதவீத பெண் வேட்பாளர்கள் தேர்லில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று கூறியுள்ளார். "மஹிலா ஹூன் லட் சக்தி ஹூன்" என்ற முழக்கத்தோடு சுமார் 8,000 பெண் தன்னார்வலர்களைக் கொண்ட ஒரு படைப்பிரிவை உருவாக்கியுள்ளார். இதன் பின்னணியாக 150 வல்லுநர்கள் இரவும் பகலாக பிரச்சாரக் குறிப்புகளை தயாரித்து வருகின்றனர். பிரியங்கா காந்தியின் வாக்குறுதிகளை இந்த படைப்பிரிவு தினமும் சுமார் 2 லட்சம் பெண்களுக்கு கொண்டு சேர்ப்பதே திட்டம்.
இதுதவிர கல்லூரி செல்லும் பெண்களுக்கு ஸ்மார்ட்போன், இரு சக்கர வாகனம், இல்லத்தரசிகளுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசம், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 கவுரவம், முதியோர்-விதவைகளுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளையும் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகக் கூறும் பிரியங்கா காந்தி, பெண்கள் பாதுகாப்பை பேராயுதமாக எடுத்திருக்கிறார்.
இந்நிலையில் இன்று பிரதமர் மோடி, மகளிருக்காக பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். இதனால் வெறும் அறிவிப்புகளுடன் காத்திருக்கும் பிரியங்கா காந்தி அல்லது நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் நரேந்திர மோடி யார் பக்கம் மகளிர் என்ற கேள்வி எழுந்துள்ளது.