

போபால்: மத்தியபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.44 லட்சத்துக்கு பகிரங்க ஏலம் விடப்பட்டுள்ளது.
ம.பி.யில் ஜனவரி, பிப்ரவரியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. தலைநகர் போபாலில்இருந்து 4 மணி நேரப் பயணத்தில், அசோக் நகர் மாவட்டத்தில் உள்ளது பத்தவுலி என்ற கிராமம். இங்கு எதிர்வரும் ஊராட்சி மன்றத்தேர்தலையொட்டி கிராம மக்கள் அனைவரும் அங்குள்ள கோயிலில் கூடினர். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பகிரங்க ஏலம் விடப்பட்டது. ஏலத் தொகை ரூ. 21 லட்சத்தில் தொடங்கி ரூ.43 லட்சம் வரை உயர்ந்தது. பிறகு சுபாக் சிங் யாதவ் என்பவர் கிராமத்துக்கு ரூ.44 லட்சம் செலுத்துவதாகக் கூறி ஏலத்தில் வென்றார்.
கிராம மக்கள் அனைவரும் அவரை வெற்றி பெற்றதாக அறிவித்து தங்கள் புதிய தலைவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். “எதிர்வரும் தேர்தலில் சுபாக் சிங்கை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள். ஆனால் ரூ.44 லட்சத்தை அவர் செலுத்த தவறினால், அடுத்த போட்டியாளர் தனது ஏலத் தொகையை செலுத்தி பதவியை பெறலாம்” என அறிவித்தனர்.
வாக்குகள் பெறுவதற்கு வேட்பாளர்கள் மதுபானம் அல்லது பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக இந்த வழக்கத்தை பின்பற்றுவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தேர்தலில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து, அவரது மனு செல்லத்தக்கதாக இருந்தால், அந்தப் பதவிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பதே வழக்கமான நடைமுறையாக உள்ளது. இதில் பதவியை ஏலம் எடுத்தவர் கூட தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது” என்றார்.