

பனாஜி: கோவாவில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் அலெக்சியோ ரெஜினால்டோ லுரென்கோ தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
கோவா காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வந்தவர் அலெக்சியோ ரெஜினால்டோ லுரென்கோ. கர்டோரிம் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏ.வாகவும் இருந்தார். இந்நிலை யில், நேற்று மதியம் அவர் சட்டப் பேரவை சபாநாயகரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவாவில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள், எம்எல்ஏ.க்கள் ராஜினாமா செய்து வருகின்றனர். இது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இரண்டு காங்கிரஸ் தலைவர்கள் தங்களது எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இப்போது லுரென்கோவும் ராஜினாமா செய்துள்ள நிலையில், 40 எம்எல்ஏக்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 2 ஆக குறைந்துவிட்டது.
கோவா தேர்தலில் போட்டியிடும் 8 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கடந்த வாரம் வெளியிட்டது. அதில் லுரென்கோ பெயரும் இருந்த நிலையில், அவர் ராஜினாமா செய்திருப்பது காங்கிரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. லுரென்கோ விரைவில் திரிணமூல் காங்கிரசில் சேருவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- பிடிஐ