Published : 21 Dec 2021 08:49 AM
Last Updated : 21 Dec 2021 08:49 AM

ஒமைக்ரானால் பாதித்தோர் எண்ணிக்கை 161 ஆக உயர்வு

புதுடெல்லி: தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் 12 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மிக அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 54 பேர் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் நேற்று கூறியதாவது:

உலகில் பரவி வரும் ஒமைக்ரான் வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாவில் புதிய வகை வைரஸ் பரவலை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இதில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றாலும் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதன்பிறகு அவர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

கரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். தற்போது ஒரு மாதத்துக்கு 31 கோடி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அடுத்த இரு மாதங்களில் இந்த எண்ணிக்கை 45 கோடியாக அதிகரிக்கும்.

பிரதமர் மோடியின் சீரிய தலைமையால் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 88 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 58 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளோம்.

இந்தியாவில் இதுவரை 161 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். போதுமான மருந்துகள், ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளன. புதிதாக 48,000 வென்டிலேட்டர்கள் மாநிலங் களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x