Last Updated : 04 Mar, 2016 10:19 AM

 

Published : 04 Mar 2016 10:19 AM
Last Updated : 04 Mar 2016 10:19 AM

குஜராத் முதல்வர் மகளுக்கு நிலம் ஒதுக்கீடு: பாஜக - காங்கிரஸ் உறுப்பினர்கள் மாநிலங்களவையில் அமளி

குஜராத்தில் சுற்றுச்சூழல் பாது காப்பு விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக, மாநிலங்களவையில் ஆளும் பாஜக உறுப்பினர்களும் காங்கிரஸ் உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி இருந்த போது, கடந்த 2010-ம் ஆண்டு கிர் காடுகள் நிறைந்த பகுதியில், இப்போதைய முதல்வர் ஆனந்தி பென் படேலின் மகள் அனார் படேலுக்கு 422 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. அப்போது ஆனந்தி பென் படேல் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார். அவரது மகள் அனார் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனத்துக்கு அந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தை விலையை விட மிக குறைந்த விலைக்கு வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை விற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநிலங் களவை நேற்று காலை கூடியதும், இந்த விவகாரத்தை காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா எழுப்பினார். பூஜ்ஜிய நேரத்தின் போது அவர் பேசுகையில், ‘‘வனவிலங்குகள், காடுகளை பாதுகாக்க நாடாளுமன்றம் சட்டங்கள் இயற்றி உள்ளது. இதற்கென தனி அமைச்சகமும் உள்ளது. ஆனால், குஜராத்தில் நடந்துள்ள நில மோசடி மிகவும் முக்கியமானது. குஜராத் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ஒரு சதுர அடி 15 ரூபாய் என்று மதிப்பிட்டு 422 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் சரணாலயத்துக்கு சொந்தமான நிலத்தை வேறு யாருக்கும் மாற்றம் செய்ய முடியாது’’ என்றார்.

அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி குறுக்கிட்டு, ‘‘ஒரு பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, அது குறித்து எந்த உறுப்பினரும் அவையில் பேச முடியாது. எனவே, உறுப்பினர் பேச அவை தலைவர் அனுமதிக்கக் கூடாது’’ என்றார்.

மேலும், ஆனந்த் சர்மாவை பார்த்து மன்ஷுக் லால் மண்டா வியா உட்பட பாஜக உறுப்பினர் கள் ஏதோ பேசினர். அதற்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் பதில் கோஷமிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் குறுக்கிட்டு, ‘‘நில மோசடி தொடர்பாக பேச காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மாவுக்கு அவைத் தலைவர் அனுமதி அளித்துள்ளார்’’ என்றார். அதன்பின் பாஜக உறுப்பினர்கள் அமைதியாயினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x