

அமிர்தசரஸ்: பொற்கோயிலுக்குள் நுழைந்து அவமதிப்பு செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து வலியுறுத்தியுள்ளார்.
சீக்கியர்களின் புனிதத் தலமாக விளங்கி வருவது அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலாகும். இந்நிலையில், அமிர்தசரஸில் உள்ளபொற்கோயிலில் நேற்று முன்தினம் மாலை பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது கருவறைக்குள் ஒருவர் அத்துமீறி குதித்ததாகக் கூறப்படுகிறது.
அங்கிருந்த புனித வாளை எடுத்துக்கொண்ட அந்த இளைஞர், சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்த் சாஹிப்பை ஓதிக்கொண்டிருந்த சீக்கிய சமய குருவை நோக்கிச் சென்றார். இதைக் கண்ட பொற்கோயில் நிர்வாககக் குழுவினர், அந்த நபரைப் பிடித்து தங்கள் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். அந்த நபர் கருவறைக்குள் குதித்து தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாக ஆத்திரமடைந்த மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி அடித்து உதைத்துள்ளனர். இதில் அந்த நபர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இதுபோலவே பஞ்சாபின் கபுர்தலா மாவட்டம், நிஜாம்பூர் கிராமத்தில், நேற்று அடையாளம் தெரியாத 25 வயது நபர் ஒருவர் அங்குள்ள கோயிலுக்குள் நுழைந்து சீக்கியர்களின் கொடியான நிஷான் சாகிப்பை அகற்ற முயன்றுள்ளார்.
அவரை பிடித்த பக்தர்கள் தனிஅறை ஒன்றில் அடைத்து வைத்து உதைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு சென்றபோலீஸார் பிடித்து வைக்கப்பட்ட நபரை விடுவிக்கும்படி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், பக்தர்கள் அறையில் அடைத்து வைத்திருந்த நபரை ஒரு கும்பல் அடித்து கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் பஞ்சாபில் அங்கும் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த விவகாரத்தை அரசியல் கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இதுபற்றி கூறியதாவது:
மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இழிவு செயலில் ஈடுபடும் நபர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற செயல் ஒரு சமூதாயத்திற்கு எதிரான சதி. பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க அடிப்படைவாத சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த சக்திகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.