

புதுடெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தமிழ்ப் பேராசிரியர் பதவிகளை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எம்.பி. கனிமொழி கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர்கள் ஓய்வுபெற்று, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. டெல்லி பல்கலைக்கழகத்தின் பிரபல கல்லூரியான லேடி ஸ்ரீராம், மிரண்டா ஹவுஸ் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசியர்கள் பதவி நிரப்பப்படாமல் உள்ளன. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் தமிழ்க் கல்வி பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்ற செய்தி 'இந்து தமிழ் திசை'யில் இன்று வெளியானது.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் மத்திய கல்வித்துறை அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
கடிதத்தில், “இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுள் மிகுந்த மதிப்புமிக்கது டெல்லி பல்கலைக்கழகம். இது அதன் பன்முகத்தன்மையால் அறியப்பட்டது. இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாகத் தமிழ்த் துறைக்குப் பேராசிரியர்கள் நிரப்பப்படாமல் உள்ளனர். இதன் காரணமாகப் பிற கல்லூரிகளிலும் தமிழ்ப் பேராசியர்கள் நிரப்பப்படாமல் தமிழ்த் துறையை மூடும் அச்சம் தரும் சூழலுக்கு வழிவகுக்கும்.
மேலும் டெல்லியின் மிராண்டா ஹவுஸ் கல்லூரி , லேடி ஸ்ரீரா கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக அரசால் கடந்த 2007-ல் அளிக்கப்பட்ட ரூ.50 லட்சம் நிதியால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் படிப்பில் டெல்லி மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் பயில மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தச் சூழலில், முதுகலை பட்டப்படிப்பு தொடங்க அனுமதியிருந்தும் பேராசிரியர்கள் அமர்த்தப்படாததால் முனைவர் ஆய்வு மட்டும் தொடர்கிறது.