கேரள மாநிலத்தில் 12 மணி நேரத்துக்குள்ளாக 2 அரசியல் கட்சி தலைவர்கள் படுகொலை: பழிக்கு பழியா என போலீஸ் விசாரணை
திருவனந்தபுரம்: கேரளாவில் 12 மணிநேரத்துக் குள்ளாக பாஜக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளைச் சேர்ந்த இரண்டு தலைவர்கள் கொலை செய்யப்பட்டதால் அங்கு பெரும்பதற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தனிப்படைகளை அமைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் அரசியல் கொலைகள் அதிகம் நடப்பதாக காங்கிரஸ், பாஜக உட்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் கே.எஸ். ஷான். இவர் நேற்று முன்தினம் மாலை தனது கட்சி அலுவலகத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல், அவரது மோட்டார் சைக்கிளை மறித்தது. பின்னர், காரை விட்டு இறங்கிய ஷானை அவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர், கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சூழலில், அதே மாவட்டத்தில் உள்ள பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் செயலாளராக இருக்கும் ரஞ்சித் சீனிவாசன் என்பவரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை சென்ற மர்ம நபர்கள், அவரை வெட்டிக் கொலை செய்தனர்.
12 மணிநேரத்துக்குள்ளாக நடைபெற்ற இந்த இரட்டைக் கொலைகேரளாவில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழியாகஇந்தக் கொலைகள் நடந்திருக் கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அசம்பாவிதங் களை தவிர்ப்பதற்காக ஆலப்புழாவில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியினரும், பாஜகவினரும் ஒருவர் மீது ஒருவர் பழிசுமத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க கேரள காவல்துறை 4-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தி வருகிறது.
இதனிடையே, இந்தக் கொலை சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், குற்றவாளிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஜே.பி. நட்டா கண்டனம்
கேரள பாஜக ஓபிசி பிரிவு தலைவர் கொல்லப்பட்டதற்கு கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். ஜே.பி. நட்டா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘கேரள மாநிலபாஜக ஓபிசி பிரிவின் தலைவர்ரஞ்சித் சீனிவாசன் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்டது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாது. முதல்வர் பினராயி விஜயன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கே இல்லாதமாநிலமாக கேரளா மாறிவிட்டது.இதுபோன்ற கொடுமைகளால் எங்களை பயமுறுத்த முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
