Published : 19 Dec 2021 07:25 PM
Last Updated : 19 Dec 2021 07:25 PM

படேல் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் கோவா முன்னதாகவே விடுதலை பெற்றிருக்கும்: பிரதமர் மோடி

பனாஜி: சுற்றுலாப் பிரியர்களின் விருப்பம் கோவா; படேல் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் முன்னதாகவே விடுதலை கிடைத்திருக்கும் என்று கோவா விடுதலைப் போராட்டத்தின் 60வது ஆண்டு விடுதலை நாள் கொண்டாட்டத்தின்போது மோடி தெரிவித்தார்.

போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படைகளால் விடுவிக்கப்பட்ட 'ஆபரேஷன் விஜய்' வெற்றியைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இன்று (டிசம்பர் 19) கோவா விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோவா விடுதலை நாள் கொண்டாட்டத்தின் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி அழைக்கப்பட்டிருந்தார். பனாஜியில் உள்ள டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி ஸ்டேடியத்தில் அவர் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் 'ஆபரேஷன் விஜய்' வீரர்களை பிரதமர் பாராட்டினார்.

கோவா விடுதலை இயக்கத்தின் தியாகிகளின் மகத்தான தியாகங்களை போற்றும் வகையில் பத்ராதேவியில் உள்ள ஹுதாத்மா ஸ்மாரக்கை சித்தரிக்கும் 'மை ஸ்டாம்பை' பிரதமர் வெளியிட்டார்.

கோவா விடுதலைப் போராட்டத்தின் போது நடந்த பல்வேறு நிகழ்வுகளின் படங்களின் படத்தொகுப்பைச் சித்தரிக்கும் 'மேக்தூத் போஸ்ட் கார்டு' பிரதமருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பஞ்சாயத்து/முனிசிபாலிட்டி, ஸ்வயம்பூர்ணா மித்ராக்கள் மற்றும் சுயம்பூர்ணா கோவா திட்டத்தின் பயனாளிகளுக்கு பிரதமர் விருதுகளை வழங்கினார்.

நிகழ்ச்சிகளுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையின் சில துளிகள்:

இன்று, கோவா தனது விடுதலைப் போராட்டத்தின் 60 ஆண்டுகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், ஆசாதி கா #அமிர்த மஹோத்சவின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் போது அதன் வளர்ச்சிக்கான புதிய கனவுகளையும் கொண்டாடுகிறது.

நாட்டின் மற்ற பெரும் பகுதி முகலாயர்களால் ஆளப்பட்ட போது கோவா போர்ச்சுகல் ஆட்சியின் கீழ் வந்தது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், கோவா தனது இந்தியத் தன்மையை மறக்கவில்லை, அல்லது இந்தியா தனது கோவாவை மறக்கவில்லை

சர்தார் வல்லபாய் படேல் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் கோவாவுக்கு முன்னதாகவே விடுதலை கிடைத்திருக்கும். கோவா ஒவ்வொரு சிந்தனையையும் அமைதியுடன் செழிக்க அனுமதித்துள்ளது. இந்தியாவில் அனைத்து மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் செழிக்க அனுமதித்துள்ளது.

ஒரு சுற்றுலா தலமாக, சுற்றுலாப் பிரியர்கள் மிகவும் விரும்பக்கூடிய இடமாக கோவா இருந்து வருகிறது. இது நல்லாட்சி, தனிநபர் வருமானம் மற்றும் 100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத மாநிலமாக உள்ளது.

கோவாவின் தகுதியுள்ள மக்கள் அனைவருக்கும் 1வது டோஸ் தடுப்பூசி கவரேஜ் 100 சதவிகிதத்தை முடித்ததற்காக நான் வாழ்த்த விரும்புகிறேன். மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஜி கோவாவின் வளர்ச்சிக்காக ஒரு பெரிய தொலைநோக்குடன் உழைக்கிறார் என்று இன்று என்னால் சொல்ல முடியும்.

கோவா மக்கள் எவ்வளவு நேர்மையானவர்கள், திறமையானவர்கள், கடின உழைப்பாளிகள் என்பதை மனோகர் பாரிக்கரின் நல்ல குணாம்சம் மூலம் இந்த நாடு கண்டது. ஒருவர் தன் கடைசி மூச்சு வரை தன் நாட்டுக்கும், தன் மக்களுக்கும் எப்படி அர்ப்பணிப்புடன் இருக்க முடியும் என்பதை அவர் வாழ்வின் மூலம் பார்த்தோம்.

இந்திய அழைப்புக்கு போப் மகிழ்ச்சி

சில காலத்திற்கு முன்பு, நான் இத்தாலி மற்றும் வாடிகன் நகரத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு போப் பிரான்சிஸை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நான் அவரை இந்தியாவிற்கு வருமாறு அழைத்தேன், அதற்கு போப் பிரான்சிஸ் பதிலளித்தபோது, "தங்கள் அழைப்பு நீங்கள் எனக்குக் கொடுத்த மிகப் பெரிய பரிசு. அதற்குக் காரணம் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் இந்தியாவின் ஒளிமயமான ஜனநாயகத்தின் மீது எனக்குள்ள அன்பு'' என்றார்.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x