

புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.களுக்காக டெல்லியில் புதிய அடுக்கு மாடி வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.பி.க் களை 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க வைப்பதால் ஏற்படும் செலவை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்கள் தங்கு வதற்கு அரசுக் குடியிருப்பு போது மானதாக இல்லை. ஒவ்வொரு முறை தேர்தலுக்குப்பின், பதவி யிழந்த எம்.பி.க்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் உடனடியாக தங்கள் அடுக்கு மாடி வீடுகள் மற்றும் பங்களாக்களை காலி செய்வ தில்லை. இவர்களில் பலரும் காலி செய்வதற்கு அதிக அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களுக்கு டெல்லியில் அரசு குடியிருப்புகள் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்கும் வகை யில் அவர்கள் 5 நட்சத்திர ஹோட் டலான அசோகாவில் தங்க வைக்கப்படுகின்றனர். இதன் அறைகளுக்கான வாடகையை மத்திய அரசு ஏற்க வேண்டியுள்ளது.
கடந்த 2014-ல் தேர்ந்தெடுக்கப் பட்ட எம்.பி.களுக்கு ஹோட்டல் வாடகையாக மே 2014 முதல் ஏப்ரல் 2015 வரை ரூ. 26.70 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இந்த செலவை குறைக்கும் வகையில் புதிய விடுதி கட்ட நிலம் ஒதுக்குமாறு டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு மக்களவை தலைமையகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி ஜன்பத் சாலையில் அமைந்துள்ள வெஸ்டர்ன் கோர்ட் கட்டிட வளாகத்தில் நஜீப் ஜங் நிலம் ஒதுக்கியுள்ளார்.
வெஸ்டர்ன் கோர்ட் கட்டிடத்தில் தற்போது மத்திய அரசின் அலுவலகம் செயல்பட்டு வருகி றது. நாடாளுமன்றத்துக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடத்தில் மொத்தம் 100 அறைகள் கொண்டதாக கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி துணைநிலை ஆளுநர் மாளிகை வட்டாரம் கூறும்போது, “டெல்லியின் பகுதி ‘இசட்’ வரிசையில் வரும் வெஸ்டர்ன் கோர்ட் நிலம், முறையாக அமைக் கப்பட்ட தொழில்நுட்பக் குழு மூலம் மாற்றி அமைக்கப்படும். பிறகு மக்களவை தலைமையகத்திடம் கட்டிடப் பணிகளுக்காக ஒப்படைக்கப்படும். 5 நட்சத்திர ஹோட்டல்களில் எம்.பி.க்கள் தங்க வைக்கப்படுவதால் ஏற்படும் செலவை தவிர்ப்பதே இதன் நோக்கம்” என்று தெரிவித்தனர்.
தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சவுத் அவென்யூ, நார்த் அவென்யூ, நர்மதா, காவேரி ஆகிய பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி வீடுகளில் தங்கி வருகின்றனர். இவற்றில் 22 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நார்த் அவென்யூவில் 232 அடுக்கு மாடி வீடுகள் உள்ளன. இதில் 193 எம்பிக்கள் தங்கியுள்ளனர். இதர வீடுகளில் பிற அலுவலகங்கள் உள்ளன. 25 ஏக்கர் நிலப்பகுதியில் அமைந்த சவுத் அவென்யூவில்163 எம்.பி.கள் தங்கி உள்ளனர். இந்த இரண்டுமே குடியரசுத் தலைவர் மாளிகையை ஒட்டி அமைந்துள்ளன.
இவை தவிர கடந்த ஆண்டு டாக்டர் பிஷம்பர் தாஸ் மார்க் பகுதியில் 52 அடுக்கு மாடி வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. வரும் நாட்களில் சவுத் மற்றும் நார்த் அவென்யூக்களில் எம்.பி.க்களுக்காக டியூப்ளக்ஸ் வகை வீடுகளும் கட்ட திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.