

தர்மசாலா: 40,000 ஆண்டுகளாக இந்தியர்களின் டிஎன்ஏ ஒரே மாதிரியானதாகத் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.
தர்மசாலாவில் ராணுவ வீரர்கள் மத்தியில் நேற்று அவர் உரையாற்றினார். குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு இரங்கல் தெரிவித்து அவர் தனது உரையைத் தொடங்கினார்.
அவர் பேச்சிலிருந்து..
பாஜகவை ஒருபோதும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தியதில்லை. பாஜகவின் கொள்கைகள் வேறு. பாஜகவினரின் செயல்பாட்டு முறை வேறு. அதை செயல்படுத்துபவர்களும் வேறு. பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிலர் ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கிறார்கள். அது மட்டும்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக இடையேயான தொடர்பு. மற்றபடி ஊடகங்கள் சொல்வதுபோல் நாங்கள் பாஜகவை இயக்கும் நேரடி ரிமோட் கன்ட்ரோல் எல்லாம் இல்லை.
இந்தியாவில் சில அரசாங்கங்கள் எங்களுக்கு எதிராக இருந்துள்ளன. ஆனாலும் அத்தனை தடையையும் மீறி நாங்கள் 96 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். அதற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் உறுதி வாய்ந்த தொண்டர்கள் தான் காரணம். சமூகத்திற்கு சேவை தேவைப்படும்போதெல்லாம் எங்களின் தொண்டர்கல் தயாராக இருக்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சுதந்திரமானவர்கள், சுயாதீன அமைப்பினர். எந்த ஒரு விளம்பர நோக்கமும் இல்லாமல் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் சேவைக்காக ஒருபோது அரசாங்கத்திடம் உதவி கோரியதும் இல்லை. இந்தியர்களின் மரபணு 40000 ஆண்டுகளாக ஒன்று தான். நமது மூதாதையர்கள் ஒரே குலத்தவரே. அந்த மூதாதையர்களால் தான் நாடு வளம் பெற்றது. கலாச்சாரமும் பாரம்பரியமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு மோகன் பாகவத் பேசியுள்ளனர்.