பொற்கோயிலில் நுழைந்த மர்ம நபர் அடித்துக் கொலை: புனித நூலை அவமதிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு

பொற்கோயிலில் நுழைந்த மர்ம நபர் அடித்துக் கொலை: புனித நூலை அவமதிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயிலில் நுழைந்து புனித நூலையும், வாளையும் கைப்பற்ற முயன்றதாக மர்ம நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளது சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோயில். இங்கு புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் புனித வாள் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை பிரார்த்தனை வேளையின்போது, மர்ம நபர் ஒருவர் பொற்கோயிலின் கர்ப்பகிரஹமாகக்க் கருதப்படும் புனித நூலும், வாளும் உள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் மற்றும் புனித வாளையும் கைப்பற்ற முயன்றதாகவும் தெரிகிறது. அவரைத் தடுத்து நிறுத்திய அங்கிருந்தவர்கள் அந்த மர்ம நபரை வெளியே இழுத்துவந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அந்த நபர் உயிரிழந்தார். இந்தக் காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

அங்கே, தலைமைப் பூஜாரி மாலை பிரார்த்தனையை உச்சரித்துக் கொண்டிருக்க ஒரு நபர் புனித நூலை எடுக்க முயற்சிக்க, அருகில் இருக்கும் துணை சாஹிப் அந்த நபரைப் பாய்ந்து தடுக்கிறார். ஆனால் தலைமைப் பூஜாரியோ எந்த சலனமும் இல்லாமல் பிரர்த்தனையைத் தொடர்கிறார்.

வீடியோவைக் காண:

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பொற்கோயிலுக்குள் அத்துமீறிய அந்த நபர் மக்கள் தாக்கியதில் உயிரிழந்தார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். அவர் எங்கிருந்து வந்தார்? எப்படி கோயிலுக்குள் நுழைந்தார்? போன்ற தகவல்களைத் திரட்டி வருகிறோம். அத்துமீறிய அந்த நபருக்கு 20 முதல் 25 வயது இருக்கும். அவர் தலையில் மஞ்சள் துணியைக் கட்டியிருந்தார். அவர் தனியாகவே வந்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொற்கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. அவரின் அடையாளம் விரைவில் கண்டறியப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ் காவல் துறை துணை ஆணையர் பரமீந்தர் சிங் பந்தால் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், பொற்கோயில் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in