

உ.பி. சட்டப்பேரவைக்கு ஒரிரு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இச்சூழலில் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் தலைவர்கள் வீடுகளில் மத்திய வருமான வரித் துறையினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இதில், வாரணாசி அருகே மாவ் நகரில் உள்ள சமாஜ்வாதியின் தேசிய செயலாளர் ராஜீவ் ராய், அகிலேஷுக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2012 தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர். ஆர்.வி.கே. குழும நிறுவனங்களின் தலைவரான ராஜீவ் ராய்க்கு கர்நாடகாவில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.
இவருடன், அகிலேஷுக்கு நெருக்கமான மனோஜ் யாதவ், ஜைநேந்திரா யாதவ் உள்ளிட்ட பலரது வீடுகளில் சோதனை நடைபெற்றது. மெயின்புரி, ஆக்ரா, லக்னோ உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் பாணியில் பாஜக தனது ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகிறது. இதற்கு அக்கட்சிக்கு உ.பி.யில் தோல்வி பயம் அதிகரித்துள்ளதே காரணம். அடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை எனப் பலவும் உ.பி.க்கு வரலாம். வரும் தேர்தலில் பாஜக தோல்வி அடைவது உறுதி. இதுபோன்ற சோதனைகள் மேற்கு வங்க தேர்தல் நேரத்திலும் நடைபெற்றன. அவற்றால் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
இவ்வாறு அகிலஷ் கூறினார்.