

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பட்டியலினத்தவர்களும், ஏழைகளும் அதிகளவில் கிறிஸ்துவ மதத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர முடிவெடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறிஸ்தவ அமைப்பினர் பசவராஜ் பொம்மையை சந்தித்து இந்த சட்டத்தை கைவிடுமாறு கோரினர். இதனை ஏற்க மறுத்த கர்நாடக அரசு வரும் 20ம் தேதி கட்டாய மதமாற்ற தடை சட்ட வரைவு மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு குறைந்தப்பட்சமாக 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும். பட்டியலினத்தை சேர்ந்த 18 வயதுக்கு குறைவானவர்களையோ, பெண்களையோ மதமாற்றம் செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 5 லட்சமும் அபராதமாக விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தை தொடர்ந்து கர்நாடகாவில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. அங்கு குறைந்தபட்ச தண்டனையாக ஓராண்டு சிறையும்,ரூ. 15 ஆயிரமும் விதிக்கப்பட்டுகிறது. ஆனால் கர்நாடகாவில் அமல்படுத்தப்பட இருக்கும் இந்த சட்டத்தில் உத்தரபிரதேசத்தை காட்டிலும் கடுமையான தண்டனைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.