Published : 18 Dec 2021 10:51 PM
Last Updated : 18 Dec 2021 10:51 PM

மோடி Vs ராகுல்: பரஸ்பரம் சாடலுடன் உ.பி.யில் அனல் பறக்கும் அரசியல் களம்!

2022 உத்தரப் பிரதேச தேர்தல்! காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி என அனைத்துக் கட்சிகளும் தனது கவனத்தை இந்தத் தேர்தலின் மேல் குவித்துள்ளது.

2022 புத்தாண்டு பரிசாக உ.பி. தேர்தல் வெற்றியை கட்சிகள் எதிர்நோக்கியுள்ளன. 403 சட்டப்பேரவைத் தொகுதிகள். நாட்டிலேயே மிக அதிகமாக சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள மாநிலம். அதனாலேயே உ.பி. தேர்தல் எப்போதுமே ஊடக கவனத்தைப் பெற்றுவிடும். அதுமட்டுமல்லாமல், 2022 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்து நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது.

மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது கூட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அதிலும் குறிப்பாக உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல் தான் காரணம் என்று கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். லக்கிம்பூர் கேரி சம்பவம், வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்க வேண்டிய நிர்பந்தத்தை இன்னும் அதிகரித்தது. லக்கிம்பூர் கேரி சம்பவத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் பேசாமல் இருந்ததும் கூட வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற பெரிய அஸ்திரத்தை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே என்றும் விமர்சனங்கள் எழாமல் இல்லை.

பாஜகவுக்கு ஆட்சியைத் தக்க வைக்க வேண்டிய பதற்றம், காங்கிரஸுக்கு தன்னை தேசிய கட்சிதான் என்று நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம். தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக பல தேர்தல்களை தொடர் தோல்வியைத் தழுவியதால் காங்கிரஸுக்கு இத்தகைய நிர்பந்தம். சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், உ.பி. தேர்தல் காரணமாக வேண்டாத சித்தப்பாவை அன்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதியோ யாருடன் கூட்டணி என்பதில் இன்னும் தடுமாற்றத்தில் இருகிறார்.

இத்தகைய சூழலில், கடந்த சில மாதங்களாகவே உத்தரப் பிரதேசத்துக்கு வளர்ச்சித் திட்டங்களை வாரி வழங்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆசியாவிலேயே மிகப்பெரிய விமான நிலையம், பூர்வாஞ்சல் விரைவுச் சாலைத் திட்டம், காசி விஸ்வநாதர் கோயில் புனரமைப்பு, கங்கா விரைவுச் சாலைத் திட்டம் என பல்லாயிரம் கோடி செலவில் நலத்திட்டங்களை பாஜக அறிவித்துள்ளது. அத்தனைக்கும் பிரதமர் மோடியே நேரே சென்று அடிக்கல் நாட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் யோகி ஆதித்யநாத்தை ஏகத்துக்கும் புகழ்ந்து வந்தவர் இன்று உ.பி. வளர்ச்சிக்கு யோகி முக்கியக்காரணம் என்று கூறி ஆங்கிலத்தில் ஒரு புதிய வார்த்தையை அறிமுகப்படுத்தியுள்ளார். UP plus Yogi is U.P.Y.O.G.I. என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

தாங்கள் செய்யும் நலத்திட்டங்கள் மீதான விமர்சனங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி என சாடியுள்ளார். பிரதமர் மோடி. "சில கட்சிகளுக்கு நாட்டின் கலாச்சாரம், வளர்ச்சி பிடிக்காது. அவர்களுக்கு அவர்களுடைய வாக்குவங்கி தான் முக்கியம். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால், கங்கையை சுத்தப்படுத்தினாலும் கேள்வி கேட்பார்கள். எல்லையில் தீவிரவாதிகளை ஒழித்தாலும் கேள்வி கேட்பார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியை கேள்விக்கு உள்ளாக்குவார்கள். அவர்களுக்கு காசி கோயிலும் பிரச்சினை, ராமர் கோயிலும் பிரச்சினை" என்று கூறினார்.

பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு சற்றும் சளைக்காமல் பதிலளித்துள்ளார் ராகுல் காந்தி. இந்து, இந்துத்துவா இதுதான் ராகுலின் அண்மைக்கால அஸ்திரமாக இருக்கிறது. இன்று அமேதியில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் அதை விட்டுவைக்கவில்லை. "ஒருபுறம் இந்து, மறுபுறம் இந்துத்துவாவாதி. உண்மையும், அன்பும், அஹிம்சையும் ஒருபுறம். பொய்மையும், வெறுப்பும், வன்முறையும் மறுபுறம் நிற்கின்றன.
இந்துத்துவாவாதி கங்கையில் மட்டும் தான் குளிப்பார். ஆனால், இந்து கோடிக்கான மக்களுடன் சங்கமிப்பார்.

நரேந்திர மோடி நான் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்கிராறே. அவர் எப்போது உண்மையைப் பாதுகாத்துள்ளார். அப்படியென்றால் அவர் இந்துவா? இந்துத்துவாவாதியா? என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

நாட்டில் மதம் பற்றிய அதுவும் இந்து மதம் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது நடைபெறும் போட்டி இந்துக்கும், இந்துத்துவாவாதிக்கும் எதிரானது. ஒருபுறம் அன்பைப் பரப்பும் இந்துக்களும், இன்னொரு புறம் பதவியைப் பறிக்க வெறுப்பை பரப்பும் இந்துத்துவாவாதிகளும் இருக்கின்றனர்.

ஓர் இந்து தனது ஆயுள் முழுவதும் மெய்வழியில் நடக்கிறார். உண்மைக்காக போராடுபவராக இருக்கிறார். ஓர் இந்து தனது சவால்களை எதிர்கொள்கிறார். இந்துத்துவாவாதியோ அரசியல் செய்கிறார். பொய்களைப் பரப்புகிறார். எப்படியாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முயல்கிறார். ஓர் இந்துத்துவாவாதி நாதுராம் கோட்சே போல் இருப்பார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தவறான கொள்கைகளால் ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர். பணமதிப்பிழப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கரோனா காலத்தில் போதிய உதவிகளை செய்யாதது என அடுக்கடுக்கான தவறுகளை பிரதமர் மோடி செய்துள்ளார்" என்று நீண்ட பிரசங்கம் செய்துள்ளார்.

கூடவே துணைக்கு வந்திருந்த சகோதரி பிரியங்கா காந்தியும் மோடி ஆட்சியை விட்டுவைக்கவில்லை. "கரோனா முதல் அலை இந்தியாவைத் தாக்கியபோது இந்த பாஜகவினர் என்ன செய்து கொண்டிருந்தனர். ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் தவித்தோம். இரண்டாவது அலையில் அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது.சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் நாட்டுக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் பாஜக இந்த 7 ஆண்டுகளில் நாட்டுக்கு என்ன செய்துள்ளது.விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர்" என்று தன் பங்கிற்கு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அப்புறம் என்ன பரஸ்பரம் சாடலுடன் உ.பி.யில் மோடி Vs ராகுல் பிரச்சாரங்களால் அரசியல் களம் அனல் பறக்கிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x