

நாட்டில் ஆட்சி அமைத்து 7 ஆண்டுகளாக பாஜக என்ன செய்துவிட்டது என கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.
உத்தரப் பிரதேசம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இதனால், அங்கு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
உ.பி.,யில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் இது நாட்டின் வளர்ச்சிக்காக என்று பேசுகிறார். பிரதமரின் நடவடிக்கைகள் தேர்தல் ஆதாயத்துக்கானது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன.
இன்று, கங்கா சாலைத்திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்த நிலையில் மறுபுறம் உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் சகோதரர் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பிரியங்கா காந்தி பேசுகையில், "கரோனா முதல் அலை இந்தியாவைத் தாக்கியபோது இந்த பாஜகவினர் என்ன செய்து கொண்டிருந்தனர். ஆக்ஸிஜன் தட்டுப்பாடால் தவித்தோம். இரண்டாவது அலையில் அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் நாட்டுக்கு ஏதும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டும் பாஜக இந்த 7 ஆண்டுகளில் நாட்டுக்கு என்ன செய்துள்ளது.
விலைவாசி உயர்வால் மக்கள் அல்லல்படுகின்றனர். விவசாயிகளை கார் ஏற்றிக் கொலை செய்த சம்பவத்தில் மகன் கைது செய்யப்பட்டும் அமைச்சரும் அவரின் தந்தையுமான அஜய் மிஸ்ரா இன்னும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள், சிறு வியாபாரிகள் கடன் ரத்து செய்யப்படும், மின் கட்டணம் பாதியாகக் குறைக்கப்படும், 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.25,000 தரப்படும். பெண்களுக்கு 40% தேர்தலில் சீட் ஒதுக்கப்படும். பெண் பிள்ளைகளுக்கு ஸ்மாட் ஃபோனும், ஸ்கூட்டியும் தரப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார்.