Published : 18 Dec 2021 09:20 PM
Last Updated : 18 Dec 2021 09:20 PM

கங்கா விரைவுச்சாலை உ.பி.,யின் முன்னேற்றத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடும்; அப்படியே நாடும் முன்னேறும்: பிரதமர் மோடி

கங்கா விரைவுச்சாலை உ.பி.,யின் முன்னேற்றத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் பி.எல்.வர்மா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அங்கு திரண்டிருந்தவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர், ககோரி சம்பவத்தில் உயிர்த்தியாகம் புரிந்த பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.

உள்ளூர் மொழியில் பேசிய பிரதமர், விடுதலைப் போராட்ட கவிஞர்கள் தாமோதர் ஸ்வரூப் வித்ரோகி, ராஜ்பகதூர் விகால், அக்னிவேஷ் சுக்லா ஆகியோருக்கு மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், பண்டிட் ராம் பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உல்லா கான், தாகூர் ரோஷன் சிங் ஆகியோருக்கு நாளை நினைவுதினம். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த இந்த மூன்று ஷாஜஹான்பூர் புதல்வர்கள் டிசம்பர் 19-ம் தேதி தூக்கிலிடப்பட்டனர். இந்தியாவின் விடுதலைக்காக உயிர் நீத்த இத்தகைய தலைவர்களுக்கு நாம் பெரும் கடன் பட்டுள்ளோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

உ.பி.யின் வளர்ச்சிக்கு புதிய கதவுகள்:

"கங்கா மாதா அனைத்து புனிதத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஆதாரமாக திகழ்கிறது. நமது வலிகளை எடுத்துக்கொண்டு, மகிழச்சியை நமக்கு அவர் தருகிறார். இதேபோல, கங்கா விரைவுச்சாலை உ.பி.,யின் முன்னேற்றத்துக்கு புதிய கதவுகளை திறந்துவிடும். இது மாநிலத்தின் ஐந்து வரங்களுக்கு ஆதாரமாக இருக்கும். விரைவுச்சாலைகள், புதிய விமான நிலையங்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றின் மூலம், மக்களின் நேரத்தை மிச்சப்படுத்துவது ஒரு வரம். இரண்டாவது வரம் வசதிகளை அதிகரித்து, மக்களுக்கு சுலபமான வழிகாட்டுதல். மூன்றாவது வரம் உ.பி.யின் ஆதாரங்களை முறையாகப் பயன்படுத்துவது.நான்காவது வரம் உ.பியின் திறன்களை அதிகரிப்பது. ஐந்தாவது வரம் உ.பி.க்கு அனைத்து விதமான முன்னேற்றத்தையும் ஏற்படுத்துதல்.

உ.பி.யில் இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் நவீன உள்கட்டமைப்பு, ஆதாரங்கள் எவ்வாறு முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு உதாரணமாகும். அரசுப் பணம் எவ்வாறு பயன்பட்டது என்பதைக் கண்டீர்கள். இன்று உ.பி.யின் பணம் வளர்ச்சியல் முதலீடு செய்யப்படுகிறது. உ.பி முழுமையாக வளரும் போது, நாடும் வளருகிறது. ஆகையால், இரட்டை எஞ்சின் அரசின் கவனம் உ.பி.வளர்ச்சியில் உள்ளது. ‘’ சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ், சப்கா பிரயாஸ்’’ என்ற மந்திரத்தின்படி, உ.பி.யின் வளர்ச்சிக்கு நாங்கள் உண்மையான முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

மாநிலத்தின் சில பகுதிகளைத் தவிர, மற்ற நகரங்கள்,கிராமங்களில் மின்சாரம் இருக்கவில்லை. இரட்டை எஞ்சின் அரசு, உ.பி.யில் 80 லட்சம் இலவச மின்சார இணைப்புகளை அளித்துள்ளதுடன், ஒவ்வொரு மாவட்டமும் முன்பை விட பல மடங்கு அதிகமாக மின்சாரத்தை பெற்று வருகிறதுர். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை மக்கள் உறுதியான வீடுகளைப் பெற்றுள்ளனர். மற்ற பயனாளிகளுக்கும் இது கிடைக்கும் வரை திட்டம் தொடரும். ஷாஜஹான்பூரில் கூட 50 ஆயிரம் பக்கா வீடுகள் கட்டப்பட்டுள்ளது.

முதல்முறையாக, தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தில் விடுபட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோருக்கு வளர்ச்சியின் பயன்களை கொண்டு சேர்க்க அரசு முன்னுரிமை. அதே உணர்வு வேளாண் கொள்கை மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கையில் பிரதிபலிக்கிறது.

இந்த விரைவுச்சாலை, தொல் வளர்ச்சி, வர்த்தகம், வேளாண்மை, சுற்றுலா போன்ற பல்துறை மேம்பாட்டுக்கு வழிகோலும். இந்தப் பிராந்தியத்தில் சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு இது பெரிய உந்துசக்தியாக இருக்கும்"

இவ்வாறு பிரதமர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x