

கங்கா சாலைத்திட்டம் மாவட்டங்களை மட்டுமல்ல பலரது மனங்களையும் இணைக்கும் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், ஷாஜஹான்பூரில் கங்கா விரைவுச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ.32 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்படு இந்த கங்கா விரைவுச்சாலை திட்டமானது மீரட், ஹபூர், புலந்த்சாகர், அம்ரோகா, சம்பல், புடுவான், ஷாஜஹான்பூர், ஹர்தோய், உன்னாவ், ரேபரேலி, பிரதாப்கர், பிரயாக்ராஜ் வழியாகச் செல்லும்.
விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் உத்தரப் பிரதேசம் வளர்ச்சி கண்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "2014 ஆம் ஆண்டுக்கு முன்னர், நாட்டில் தேர்தலை ஒட்டி மட்டும் தான் நலத்திட்ட அறிவிப்புகள் வரும்.
ஆனால், மோடி பிரதமரான பின்னர் முன்பு என்னவெல்லாம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதோ அவற்றையெல்லாம் தேடித் தேடி நிறைவேற்றி வருகிறார். சிறிதுநாட்களுக்கு முன்னர் தான் பூர்வாஞ்சல் சாலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.
இப்போது கங்கா சாலைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கங்கா சாலைத்திட்டம் மாவட்டங்களை மட்டுமல்ல பலரது மனங்களையும் இணைக்கும். இந்தத் திட்டத்தால், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெறும், வர்த்தகம் மேம்படும்" என்றார்.