பிரதமரையே 18 வயதில் தேர்வுசெய்யும்போது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க முடியாதா? - ஓவைசி

பிரதமரையே 18 வயதில் தேர்வுசெய்யும்போது வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க முடியாதா? - ஓவைசி
Updated on
1 min read

புதுடெல்லி: "நாட்டின் பிரதமரை 18 வயதில் தேர்வு செய்யும்போது தனக்கான துணையை தேர்ந்தெடுக்க முடியாதா?" என்று ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்தும் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவை வரவேற்றும் விமர்சித்தும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் ஓவைசி கூறும்போது, “18 வயதில், ஒரு இந்திய குடிமகன் / குடிமகள் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், தொழில் தொடங்கலாம், பிரதமரைத் தேர்வு செய்யலாம். எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு இருக்கும்போது மத்திய அரசின் முடிவு, தவறான முடிவு. ஆண்களுக்கான திருமண வயது வரம்பயே 21 என்பதிலிருந்து 18 ஆக குறைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

குற்றவியல் சட்டங்களால், இந்தியாவில் குழந்தை திருமணம் குறையவில்லை. மாறாக கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் காரணமாகத்தான் குறைந்துள்ளன. பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எதையும் செய்யவில்லை” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in