

புதுடெல்லி: கல்பாக்கத்தில் ஃபாஸ்ட் ரியாக்டர் எரிபொருள் சுழற்சி வசதி டிசம்பர் 2027க்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இதை மத்திய அணுசக்தி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மக்களவையில் நேற்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கூடங்குளம் மற்றும் கல்பாக்கத்தில் அணுசக்தி திட்டப்பணிகள் செயல்பாடுகளை விரைவுபடுத்தி நிறைவேற்றுவது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி.யான டி.எம்.கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து வேலூர் எம்.பி.யான கதிர் ஆனந்த் தன் கேள்வியில், ''கூடங்குளத்திலுள்ள கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் கல்பாக்கத்தில் உள்ள விரைவு உலை எரிபொருள் சுழற்சி வசதித் திட்டங்களின் கட்டுமானப் பணிகளை என்பிசிஐஎல் விரைவுபடுத்தியதா?'' எனக் கேட்டிருந்தார்.
இதற்கு மத்திய அணுசக்தி மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:
''கல்பாக்கத்தின் 3 மற்றும் 4 இல் என்பிசிஎல் எனப்படும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் திட்டப் பணிகளைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டப் பணிகள் கடந்த நவம்பர், 2021 நிலவரப்படி 54.96 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது. கூடங்குளம் 3 மற்றும் 4 திட்டங்களில் அலகுகள் முறையே மார்ச், 2023 மற்றும் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்பாக்கத்தில் ஃபாஸ்ட் ரியாக்டர் எரிபொருள் சுழற்சி வசதி திட்டம் தற்போது அணுசக்தி மறுசுழற்சி வாரியம், பாபா அணு ஆராய்ச்சி மையம், அணுசக்தி துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது. இது, கடந்த நவம்பர் 30, 2021 நிலவரப்படி திட்டத்தின் நிதி முன்னேற்றம் 32 சதவிகிதம் ஆகும். மேலும் இத்திட்டம் டிசம்பர் 2027ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது''.
இவ்வாறு ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.