

புதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான உலக அழகி இறுதிப் போட்டி அமெரிக்காவின் போர்ட்டோ ரிக்கோவில் நடைபெற இருந்தது. இந்நிலையில், இந்திய அழகி மானசா வாரணாசி உட்பட 16 அழகிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, போட்டி தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போட்டியில் பங்கேற்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் அனைவரும்தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறுதிப் போட்டி மீண்டும் அடுத்த 90 நாட்களுக்குள், போர்ட்டோ ரிக்கோவின் வேறு பகுதியில் நடத்த திட்டமிடப்படும் என்று உலக அழகிப் போட்டிக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து உலக அழகிப் போட்டிக்கான அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, ‘‘இன்று காலை பல்வேறு அழகிகளுக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதிப் போட்டியை தள்ளி வைக்க முடிவு எடுக்கப்பட்டது’’ என்று தெரிவித்துள்ளது.