

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் சிறப்புமிக்க காளி கோயிலை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்றதன் 50-ம் ஆண்டு விழாவை வங்கதேசம் கொண்டாடி வருகிறது. இந்த விழாவில் வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதின் அழைப்பை ஏற்று இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றுள்ளார்.
கடந்த 1971வங்கதேச விடுதலைப் போரின் போது, டாக்காவில் உள்ள வரலாற்று சிறப்பு மிகுந்த காளி கோயில் பாகிஸ்தான் ராணுவத்தால் அழிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் புனரமைக்கப்பட்ட காளி கோயிலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்து வழிபாடு செய்தார். பிறகு டாக்காவில் இந்திய சமூகத்தினர் மத்தியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசும்போது, “வரலாற்று சிறப்பு மிகுந்த காளி கோயிலை திறந்து வைக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் படைகளால் இடிக்கப்பட்ட கோயிலை மீட்டெடுக்க இந்திய, வங்கதேச அரசுகளும், இரு நாட்டு மக்களும் உதவியதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தியா, வங்கதேச மக்கள் இடையிலான கலாச்சார மற்றும் ஆன்மீக பிணைப்பின் சின்னமாக இக்கோயில் உள்ளது. எனது வங்கதேச பயணத்தின் ஒரு மங்களகரமான நிகழ்ச்சியாக திறப்பு விழா அமைந்தது” என்று தெரிவித்தார்.
- பிடிஐ