பெகாசஸ் உளவு பார்த்த குற்றச்சாட்டு: மே.வங்க அரசு விசாரணைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடை

பெகாசஸ் உளவு பார்த்த குற்றச்சாட்டு: மே.வங்க அரசு விசாரணைக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தடை
Updated on
1 min read

புதுடெல்லி: இஸ்ரேலின் பெகாசஸ் என்ற மென் பொருளைக் கொண்டு இந்தியாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் குற்றச் சாட்டு தொடர்பாக விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை கடந்த அக்டோபர் மாதம் 27-ம் தேதி நியமித்தது. ஒவ்வொரு குடிமக்களின் அந்தரங்க உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தேசிய பாதுகாப்பை காரணமாக அரசு சுட்டிக் காட்டுவதை நீதிமன்றம் மவுனமாக பார்த்துக் கொண்டிருக்காது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.பி.லோகுர், கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜோதிர்மயி பட்டாச்சார்யா ஆகியோரைக் கொண்ட விசாரணை ஆணையத்தை மேற்கு வங்க அரசு அமைத்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் கொண்டஅமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. லோகுர் விசாரணை ஆணையம் இந்த விவகாரத்தை விசாரிக்காது என்று மேற்குவங்க அரசு ஏற்கெனவே உத்தரவாதம் அளித்த நிலையில், ஆணையத்தின் விசாரணை தொடருவதாக மனுவில் கூறப்பட்டுள்ளதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பின்னர், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க மேற்குவங்க அரசு அமைத்த லோகுர் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in