

லக்னோ: நாட்டின் மிக நீளமான பாதையாக அமைய இருக்கும் கங்கா விரைவுச் சாலை திட்ட கட்டுமானப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் மீரட் மற் றும் பிரயாக்ராஜ் மாவட்டங்களை இணைக்கும் கங்கா விரைவுச் சாலை திட்டத்துக்கு மாநில அரசு ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியது. 10 மாவட்டங்களை இணைக்க உள்ள கங்கா விரைவு சாலை 594 கி.மீ. நீளத்துக்கு அமைய உள்ளது. இது நாட்டிலேயே மிகவும் நீளமான விரைவுச் சாலையாக இருக்கும். இதன் மூலம் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து தேசிய தலைநகர் மண்டல பகுதிக்கு நேரடியாக சாலை வசதி கிடைக்கும்.
கங்கா விரைவுச் சாலை அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உ.பி. மாநிலம் ஷாஜ கான்பூரில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு விரைவுச் சாலை கட்டுமானப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து பிரதமர் மோடி உ.பி. வருகிறார். இந்நிகழ்ச்சியில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
ரூ.36,230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கங்கா விரைவுச் சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளதாக மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித் தார். உ.பி.யில் கடந்த மாதம் பூர்வாஞ்சல் விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
- பிடிஐ