

ஆந்திர சட்டப்பேரவைக்குள் நுழைய நகரி தொகுதி எம்.எல்.ஏ. வும், நடிகையுமான ரோஜாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு தடை நீடிக்க வேண்டும் என்றும் சலுகை களை பறிக்க வேண்டும் என்றும் உரிமைக் குழு பரிந்துரை செய் துள்ளது.
கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது, முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களை தரக்குறைவாக பேசியதாகக் கூறி ரோஜாவுக்கு பேரவைத் தலைவர் ஓராண்டு இடைக்கால தடை விதித்தார். இதை எதிர்த்து ரோஜா தாக்கல் செய்த மனுவை ஹைதராபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து ரோஜாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரோஜாவை பேரவைக்குள் நுழைய அனுமதி வழங்கும்படி உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இதன்படி, பேரவைத் தலைவர் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
நீதிமன்ற உத்தரவுடன் பட்ஜெட் கூட்ட தொடரில் கலந்து கொள்ள சென்ற ரோஜாவை பேரவை மெய்காப்பாளர்கள் அனுமதிக்கவில்லை. அவைத் தலைவர் உத்தரவிட்டால்தான் உள்ளே அனுமதிப்போம் எனக் கூறினர். இதனால், ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் சட்டப் பேரவைக்கு ரோஜா சென்றார். அப்போதும் பாதுகாவலர்கள் அவரை உள்ள அனுமதிக்கவில்லை இதை கண்டித்து சட்டப்பேரவை வளாகத்துக்கு வெளியில் ரோஜா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப் போது அவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று காலை யில் ஆந்திர பேரவை, அவைத் தலைவர் கோடல சிவப்பிரசாத் தலைமையில் கூடியது. அப்போது, பேரவை உரிமைக் குழு ஓர் அறிக்கையை தாக்கல் செய்தது.
அதில், “ரோஜா மீது விதிக்கப் பட்ட ஓராண்டு இடைக்கால தடை தொடர வேண்டும். 4 முறை உரிமைக் குழு முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியும் ரோஜா ஆஜராகாததால், ஓராண்டு வரை அவருக்கு அரசு வழங்கும் சலுகை களை ரத்து செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மீது பேரவையில் விவாதம் நடைபெற்றது. இதனிடையே நேற்று காலையில், ஆந்திர அரசு சார்பில் பேரவை செயலாளர் தரப்பில் ரோஜா அனுமதி குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.