

தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வரும், ஆனால் கர்நாடகா எதிர்த்து வரும் காவிரி மேலாண்மை வாரிம அமைக்கும் திட்டமில்லை என்று மத்திய ரசாயன மற்றும் உரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இன்று காலை நான் மத்திய நீராதார அமைச்சர் சாத்வி உமாபாரதியிடம் இது குறித்து பேசினேன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை" என்றார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினார். ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா, இதனை எதிர்த்தார்.
அதாவது ஏற்கனவே இது பற்றிய மேல் முறையீடுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது இது சரியாகாது என்றார்.
இந்த நிலையில் ஆனந்த் குமார் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், அல்லது அது அமைக்கப்படவேண்டும் என்பதெல்லாம் வெறும் ஊகங்களே. அது போன்ற ஊகங்களுக்கு இடமில்லை, அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை.
சித்தராமையா என்னைச் சந்தித்துப் பேசியபோது கர்நாடகா மக்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று கூறிவிட்டேன்” - என்றார்.