Published : 17 Dec 2021 09:54 AM
Last Updated : 17 Dec 2021 09:54 AM

'தடுக்க முடியாவிட்டால் பலாத்காரத்தை அனுபவியுங்கள்': கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் குமாரின் பேச்சு சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று (வியாழக்கிழமை) விவசாயிகள் பிரச்சினை எழுப்பப்பட்டது. விவசாயிகள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே, "அனைத்து உறுப்பினர்களும் பேச நேரம் ஒதுக்கினால் எப்படி அலுவல்களை மேற்கொள்வது. நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன். எனது அக்கறை எல்லாம் அவை தடைபடாமல் அலுவல் நடக்க வேண்டும் என்பதே" என்றார்.

சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே

அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ரமேஷ் குமார், "ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும் என்று. நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள் " என்று சபாநாயகரைப் பார்த்து கூறினார்.

எம்எல்ஏவின் இந்தக் கருத்துக்கு அவையில் ஒரே ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக அவையில் சிரிப்பொலி எழுந்தது. சபாநாயகரும் ஆமோதிப்பது போல் சிரித்தார். பெண்ணின் மாண்பை சிதைக்கும் எம்எல்ஏ.,வின் இந்தப் பேச்சு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷ் குமாரும் கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக இருக்கிறது. கடந்த ஜனவரி 2019 முதல் மே 2021 வரை மாநிலத்தில் 1168 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக மாநில போலீஸார் தெரிவித்துள்ளனர். அதாவது சராசரியாக நாளுக்கு ஒரு பலாத்கார சம்பவம் கர்நாடகாவில் நடைபெறுகிறது எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் சட்டப்பேரவையில் எம்எல்ஏ ஒருவர் இவ்வாறாக பேசியிருப்பதும், அதற்கு சபாநாயகர் உட்பட் யாரும் கண்டனம் தெரிவிக்காததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் மைசூரு சாமுண்டி மலையில் நடந்த பாலியல் பலாத்காரம் தேசிய அளவில் கவனம் பெற்றது. இந்தச் சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் அரக ஜனேந்திரா, அந்த நேரத்தில் ஆள் அரவமற்ற பகுதிக்கு அந்தப் பெண் தனது ஆண் நண்பருடன் சென்றிருக்கக் கூடாது எனக் கூறியிருந்தார். அவரது கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவர் அந்தக் கருத்தைத் திரும்பப் பெற்றார்.

மன்னிப்பு கோரிய எம்எல்ஏ:

தனது கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் இது குறித்து எம்எல்ஏ கேஆர் ரமேஷ்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். நேற்றிரவு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் பேச்சுவாக்கில் தான் அப்படிச் சொல்லிவிட்டேனே தவிர கொடுங்குற்றமான பாலியல் பலாத்காரத்தை அங்கீகரிக்கவில்லை. இனி அவையில் எனது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்வு செய்வேன்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x