உ.பி. தேர்தல் எதிரொலி: 40 எம்.பி.க்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி

உ.பி. தேர்தல் எதிரொலி: 40 எம்.பி.க்களை இன்று சந்திக்கிறார் பிரதமர் மோடி
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், உ.பி. மாநில எம்.பி.க்கள் 40 பேருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் போதெல்லாம் பாஜக எம்.பி.க்களுடன் காலை சிற்றுண்டியை ஒட்டிய சந்திப்புகளை பிரதமர் நடத்துவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில் இன்று அவர் உத்தரப் பிரதேச மாநில பாஜக எம்.பி.க்கள் 40 பேருடன் ஆலோசனை நடத்துகிறார். கடந்த வாரம் மத்தியப் பிரதேச மாநில பாஜக எம்.பி.,க்களுடன் அவர் சந்திப்பு நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பிரதமர் மோடி காசி விசுவநாதர் கோயிலில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதேபோல் வாரணாசியில் பாஜக ஆளும் 12 மாநிலங்களில் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் இன்று உ.பி. எம்.பிக்களுடன் சந்திப்பு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

உத்தரப் பிரதேச தேர்தலை ஒட்டி டிசம்பர் இறுதிக்குள் மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பாஜக யாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளது. 6 பிரம்மாண்ட யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 403 தொகுதிகளும் முழுமையாக அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச தேர்தலில் இதுவரை நிஷாத் கட்சி, அப்னா தளம் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. இன்று லக்னோவில் நடைபெறவுள்ள பேரணியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in