

குவஹாட்டி:பிரதமர் மோடிக்கு கட்சியைப் பற்றியோ, கட்சி உறுப்பினர்களைப்பற்றியோ எதைப்பற்றியும் கவலையில்லை தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் மட்டுமே இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்
அசாம் மாநில காங்கிரஸ் தொண்டர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் குவஹாட்டி நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு பேரழிவானது. இந்த தேசம் வேகமாகச் சரிந்து வருகிறது. தற்போது மத்தியில் உள்ள அரசு தொடர்ந்து நீடித்தால் மிகப்பெரிய ஆபத்தில்தான் முடியும், பேரழிவுக்கான அரசாக இருக்கிறது.
தன்னுடைய தோல்விகளை மறைப்பதற்காக மதத்தை கையிலெடுத்து அரசியல் செய்கிறது. மதத்தை கையில் எடுக்க மற்றொரு காரணம், இதை வைத்து தேசத்தை பிளவுபடுத்தி, தேர்தலில் வெல்லலாம்.
பிரதமர் மோடிக்கு எதைப்பற்றியும் அச்சமில்லை. தனது கட்சியைப்பற்றியோ, எம்.பி.க்கள், முதல்வர்கள், கட்சித் தலைவர், துணைத் தலைவர், நீதிபதிகள், கடவுள் என எதைப்பற்றியும் அச்சமில்லை. அவருக்கு இப்போதுள்ள பயம், தேர்தலில் தோற்றுவிடுவோமோ என்பதுமட்டும்தான்.
எந்தச் சூழலிலும் தேர்தல் தோல்வியை அவர் விரும்பவில்லை. குறைந்தபட்சம் இதற்காக அச்சப்படுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தத் தேசத்தைக் காக்கும் ஒரேவழி ஒவ்வொரு தேர்தலிலும் மோடியை தோற்கடிப்பதுதான்.
நம்முடைய எல்லைப்பகுதியை சீனா ஆக்கிரமித்துவருவது நம் முன்னால் இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது, எல்லையோர கிராமங்களில் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி, கட்டிடங்களைக் கட்டுகிறது. காஷ்மீர் இளைஞர்கள் மீண்டும் தீவிரவாதத்துக்கு திரும்புகிறார்கள், பொருளாதாரம் சீரழிந்து வருகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1977ம் ஆண்டுமிகப்பெரிய தேர்தல் தோல்விக்குப்பின் விஸ்வரூபம் எடுத்தார். ஆதலால், காங்கிரஸ் தொண்டர்கள் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
கடந்த 1996, 1998, 1999 தேர்தலில் நாம் தோற்றோம். 1999ம் ஆண்டு நாம் சிறந்த பேச்சாளர், மாபெரும் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் தோல்வி அடைந்தோம். ஆனால், 2004ம் ஆண்டு சோனியா காந்தி, காங்கிரஸ் தொண்டர்களின் கடினமான உழைப்பால் மீண்டும் ஆட்சி அமைத்தோம்.
ஆதலால், நான் சொல்லவிரும்புவது என்னவென்றால், ஏழரை ஆண்டுகளைவைத்து மோடி தோற்கடிக்க முடியாதவர் என்ற முடிவுக்கு வரக்கூடாது. நம்முடைய அரசியல் சரியானது, மோடி தவறானவர் என்பதை நம்புங்கள். உங்களை நீங்கள் தேற்றுங்கள், அப்போதுதான் மற்றவர்களை நீங்கள் சமாதானப்படுத்தி, தேற்ற முடியும்
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்