

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எண்ணமே காங்கிரஸுடன் நாங்கள் கூட்டணி வைக்கக் காரணம் என மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுர்ஜியா காந்தா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவரும், மார்க்சிஸ்ட் அரசியல் நிலைக்குழு உறுப்பினருமான சுர்ஜியா காந்தா மிஸ்ரா மேலும் கூறியதாவது:
மேற்குவங்கத்தில் அசாதார சூழல் நிலவுகிறது. அறிவிக்கப் படாத அவசரநிலைப் பிரகடனம் அமலில் உள்ளது. மக்களின் விருப்பம்தான் காங்கிரஸுடன் நாங்கள் கூட்டணி வைக்கும் முடிவை ஏற்படுத்தியது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வர் பதவி யாருக்கு என்பதை அப்போது முடிவு செய்வோம். எங்களின் முதல் இலக்கு மாநிலத்தில் ஜன நாயகத்தை திரும்பச் செய்வதுதான்.
திரிணமூல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றத் தயாரா என்பதை காங்கிரஸ் அறிவிக்க வேண்டும் என பொதுக்கூட்டத்தில் நான் அழைப்பு விடுத்தேன்.
திரிணமூலை ஆட்சியிலிருந்து இறக்கி மேற்கு வங்கத்தையும், பாஜகவை இறக்கி இந்தியாவையும் பாதுகாப்பதே எங்கள் நிலைப்பாடு. அதேநேரத்தில் காங்கிரஸ் எங்க ளுடன் உடன்பட்டது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, காங்கிரஸ், திரிணமூலை ஆதரிக்காது. எந்த வொரு துரோகத்துக்கும் மக்கள் தண்டனை கொடுப்பார்கள் இவ் வாறு அவர் தெரிவித்தார்.