Published : 17 Dec 2021 03:05 AM
Last Updated : 17 Dec 2021 03:05 AM

ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி: குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என ம.பி. முதல்வர் அறிவிப்பு

போபால்: ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடலுக்கு போபாலில் ராணுவ அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிக்கிய விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங் 85 சதவீத தீக்காயங்களுடன் உதகையில் உள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்,பெங்களூருவில் உள்ள விமானப்படையின் கமாண்ட் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதையடுத்து, வருண் சிங்கின் உடல் அவரது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு நேற்று மதியம் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. போபால் ராஜா போஜ் விமான நிலையம் சென்றடைந்த அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று உடல் தகனம்

வருண் சிங்கின் உடல் அவரது சொந்த ஊரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல் இன்று முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். அவரது தந்தை மிகவும் தைரியமாக உள்ளார். அவரது குடும்பமே நாட்டுப் பற்றுடன் இருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும்” என்றார்.

ஒரே நாளில் காப்பீடு வழங்கல்

குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங்கும் ஒருவர்.

ஹர்ஜிந்தர் சிங்குக்கு ஐசிஐசிஐ வங்கியில் சம்பளக் கணக்கு இருந்தது. அத்துடன், அவருக்கு ஐசிஐசி லோம்பார்ட் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விபத்துக் காப்பீடும்செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் இறந்த செய்தியை அறிந்து அந்நிறுவனம், அவருக்கு உரிய விபத்துக் காப்பீட்டுத் தொகையான ரூ.1 கோடியை ஒரே நாளில் வழங்கியது. சூழலின் தீவிரத்தை உணர்ந்து ஒரே நாளில் அந்தத் தொகையை வழங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x