

புதுடெல்லி: முப்படைத் தளபதிகள் குழு தலைவராக ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் குன்னூர் அருகே அண்மையில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முதல் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், புதிய முப்படை தளபதியை நியமிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்தப்பதவிக்கு முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் இப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானேவின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், முப்படை தளபதிகள் குழு தலைவராக எம்.எம்.நரவானே நேற்று நியமிக்கப்பட்டார். அவர் நேற்றே பொறுப்பேற்றுக் கொண்டார். பாதுகாப்புத் துறை தொடர்பாக பல விவகாரங்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால், எம்.எம். நரவானேவுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விரைவில் முப்படை தளபதி பதவிக்கு தகுதியான நபர் நியமிக்கப்படுவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.