1971 பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்ற 50-வது ஆண்டு: இந்திய வீரர்களுக்கு நாடாளுமன்றம் புகழாரம்

1971 பாகிஸ்தான் போரில் வெற்றி பெற்ற 50-வது ஆண்டு: இந்திய வீரர்களுக்கு நாடாளுமன்றம் புகழாரம்
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50-வதுஆண்டு தினத்தை முன்னிட்டு வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் நாடாளுமன்றத்தில் புகழாரம் செலுத்தப்பட்டது.

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால், வங்கதேசம் உருவானது. இந்தப் போரின் 50-வது ஆண்டு வெற்றி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லா கூறுகையில், ‘‘வங்கதேச சுதந்திரப் போராட்ட வீரர்களும் இந்திய ராணுவத்தின் முப்படையினரும் தங்கள் முன்மாதிரியான வீரத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்தினர். அவர்களுடைய அளவற்ற தியாகம் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும்’’ என்று புகழாரம் கூட்டினார்.

மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடு கூறுகையில், ‘‘1971-ம் ஆண்டுபோரின்போது நமது ராணுவத்தினர் காட்டிய வீரம் இன்றும் நாடுமுழுவதும் நம்மால் பெருமையோடும் ஆர்வத்தோடும் நினைவுகூரப்படுகிறது. நமது நாட்டு மக்களுக்கு இது தொடர்ந்து ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். நமது நாட்டின் பெருமையை பாதுகாக்க தீரத்துடன் போராடி வெற்றிபெற்ற துணிச்சல் மிகுந்த நமது ராணுவத்தினரை போற்றி வணங்குகிறோம்’’ என்றார்.

பிரதமர் மரியாதை

முன்னதாக, நேற்று காலை டெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னத்தில் பிரதமர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வெற்றி ஜோதியையும் அவர் ஏற்றினார். அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் 1971போரில் ஈடு இணையற்ற வெற்றியைப் பெற்றுத் தந்த ராணுவ வீரர்களை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று பிரதமர்குறிப்பிட்டார். பின்னர், ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘‘நமது வீரர்களின் துணிச்சல் மற்றும் அளவற்ற தியாகத்தை இந்நாளில் நினைவுகூர்கிறோம். அனைவரும் ஒன்றாகப் போராடி அடக்குமுறை சக்திகளை தோற்கடித்தோம். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெறும் கொண்டாடட்டத்தில் நமது குடியரசுத் தலைவர் கலந்து கொண்டிருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைத்த பெருமை’’ என்று கூறியுள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘1971-ம்ஆண்டு நடந்த போர் இந்திய ராணுவத்தின் வரலாற்றில் ஒரு பொன்னான அத்தியாயம். இந்த நாளில்நமது ராணுவ வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும்நினைவு கூர்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in