

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பிறழ் சாட்சி அளித்த 84 பேரை மீண்டும் அரசு தரப்பு வழக்கறிஞர் விசாரித்தது சட்டப்படி தவறு என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் 5-வது நாளாக தனது இறுதிவாதத்தை எடுத்துரைத்தார்.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக் கின் விசாரணை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஜெய லலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் தனது இறுதிவாதத்தை தொடங்கினார். அப்போது அவர் வாதிடுகையில், ''இவ்வழக்கில் ஜெயலலிதாவின் கட்டிடங்களில் செய்துள்ள மின்சாதன பணி களை (ஒயரிங் உள்ளிட்ட பல வேலைகள்) மதிப்பீடு செய்வதற்கு அப்போதைய திமுக அரசு திருத்துவராஜ் என்ற இன்ஜினீயர் தலைமையில் குழு அமைத்தது.
மதிப்பீட்டு குழுவினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் 15 நாட்களுக்கும் மேலாக சோதனை செய்தனர். 1968-ம் ஆண்டு கட்டப்பட்டு இருந்த அக்கட்டிடத்தில் பெரும்பாலான மின்சாதனப் பணிகள் அனைத்தும் வெளியே தெரியாத வகையில் சுவரின் உட்புறமாகவே செய்யப் பட்டிருந்தது. சுவருக்குள் இருந்த ஒயர்கள் எது என்பதனை அறியாமல், அவர்கள் தாமிர ஒயர்கள் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு மற்றும் தியாகராய நகரில் உள்ள கட்டிடங்களில் மரத்தினாலான நாற்காலிகள், மேஜைகள், அலங் காரப் பொருட்களை மதிப்பிடுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடிதம் அனுப்பினர். ஆனால் அவர்கள் மதிப்பீடு செய்யும் பணியை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரில் ஒரு சிலரே அவற்றை மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
மொத்தத்தில் திமுக அரசால் நியமிக்கப்பட்ட மதிப்பீட்டு குழுவினர், ஜெயலலிதாவின் சொத்து மதிப்பை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காகவே பொய்யாக, சட்டத்திற்கு புறம்பாக அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் சாட்சியம் அளித்த 84 பேர் பல்வேறு கால கட்டத்தில் பிறழ் சாட்சியமாக மாறினார்கள். இதனைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் பிறழ் சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் அப்போதைய அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவை 84 பிறழ் சாட்சிகளை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அவர் 84 பிறழ் சாட்சி களை மட்டும் விசாரிக்காமல், ஏற்கெனவே விசாரணையும், குறுக்கு விசாரணையும் செய்யப் பட்ட அனைவரையும் மீண்டும் விசாரித்தார்.
அப்போது சாட்சிகளில் பலர் தாங்கள் கூறியதை மாற்றி வாக்குமூலம் அளித்தனர். இன்னும் சிலர் ஆச்சார்யாவின் குறுக்கு விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, சொத்துக்குவிப்பு வழக்கில் அனைத்து சாட்சிகளையும் மீண்டும் விசாரித்தது சட்டப்படி தவறு'' என்றார்.
ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதம் இன்னும் முடிவடையாத தால் அவரது வழக்கறிஞர் பி.குமாரை வியாழக்கிழமையும் தொடர்ந்து வாதிடுமாறு நீதிபதி டி'குன்ஹா அறிவுறுத்தினார்.