கூடுதல் சேவைகளுக்காக 2018லிருந்து ரூ.346 கோடி வசூலித்த எஸ்பிஐ வங்கி: மத்திய அரசு தகவல்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

புதுடெல்லி: ஜன்தன் வங்கிக் கணக்கு உள்ளிட்ட அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் சேவைகளுக்காக 2017-18ஆம் ஆண்டிலிருந்து 2021 அக்டோபர் மாதம் வரை ரூ.346 கோடியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வசூலித்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பாகவத் காரத் பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது:

''ஜன்தன் வங்கிக் கணக்கு உள்பட அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் 2017-18ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அனுமதிக்கப்பட்ட குறைந்தபட்ச சேவைகள் தவிர்த்து, கூடுதல் சேவைகளுக்காக எஸ்பிஐ வங்கி ரூ.345.84 கோடி கட்டணமாக வசூலித்துள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, 2020, ஜனவரி 1-ம் தேதிக்குப் பின் ரூபே, டெபிட் கார்டு, யுபிஐ, யுபிஐ கியூஆர் கோட் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டதற்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட்டிருந்தால் திருப்பித் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குதாரர்களுக்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. அவர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டியதில்லை.

எஸ்பிஐ வங்கி 2019-20ஆம் ஆண்டு முதல் 2020-21ஆம் ஆண்டு வரை கூடுதல் சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.224.8 கோடி வசூலித்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் ரூ.152.42 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.72.38 கோடியும் வசூலிக்கப்பட்டது.

அதில் 2020 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 14 வரை ரூ.90.19 கோடி வாடிக்கையாளர்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக் கணக்குதாரர்களிடம் கூட நிர்ணயிக்கப்பட்ட இலவச சேவைகளுக்குப் பின், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கிறோம் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது''.

இவ்வாறு அமைச்சர் பாகவத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in