

புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றதன் 50-வது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று புறப்பட்டுச் சென்றார்.
பாகிஸ்தானில் இருந்து தங்களுக்கு விடுதலை கோரி கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் போராடி வந்தனர். இதன் தொடர்ச்சியாக, 1971-ம் ஆண்டு இந்த விவகாரத்தில் தலையிட்ட இந்தியா, ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு அதன் கிழக்குப் பகுதியை பாகிஸ்தானில் இருந்து பிரித்து வங்கதேசம் என்ற தனி நாட்டை உருவாக்கிக் கொடுத்தது. இந்த வெற்றியின் 50-வது ஆண்டு விழா வங்கதேசத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வங்கதேச அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தார். இதன்பேரில், ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக நேற்று வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் வரும் 17-ம் தேதி வரை மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ராம்நாத் கோவிந்த், வங்கதேச அதிபர் அப்துல் ஹமீதை சந்தித்து பேசவுள்ளார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோரும் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசுவார்கள் என அந்நாட்டு அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.