Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

நிபந்தனையின்றி சரணடைந்த பாகிஸ்தான் ராணுவம்: வங்கதேச சுதந்திரத்துக்காக 1971-ல் நடந்த போரில் இந்தியா இமாலய வெற்றி!

புதுடெல்லி: 1971-ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரானபோரின்போது இந்தியாவிடம் எந்தவித நிபந்தனையும் இன்றி சரணடைவதாக மேற்கு பாகிஸ்தானில் இருந்த பாகிஸ்தான் படைகளுக்கான தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் நியாஸி, வரலாற்றுச் சிறப்புமிக்க சரண் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1971-ம் ஆண்டு டிசம்பர் 3 முதல் டிசம்பர் 16 வரை நடந்த போரில் இந்தியாவும், முக்தி பாஹினியும் (வங்கதேசப் படை) வெற்றி பெற்றன. போரின் முடிவில் இந்த சரண் அடையும் ஒப்பந்தம் அப்போது இந்தியாவின் ராணுவ லெப்டினன்ட் ஜெனரலும், கிழக்கு கமாண்ட் பிரிவு பொறுப்பாளருமான ஜெக்ஜித் சிங்அரோரா முன்னிலையில் நடைபெற்றது. சரண் அடையும் ஒப்பந்தத்தில் நியாஸி கையெழுத்திட்ட பின்னர் ஜெக்ஜித் சிங் கையெழுத்திட்டு அந்த ஒப்பந்தத்தை பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்தார். இந்த ஒப்பந்த நிகழ்ச்சியின்போது இந்தியாவின் சார்பில் ஏர் வைஸ் மார்ஷல் எச்.சி.தேவன், வைஸ் அட்மிரல் என்.கிருஷ்ணன், வங்கதேச படைகளின் குரூப் கேப்டன் கோன்ட்கர் உள்ளிட்டோர் இருந்தனர்.

சரணடைந்த பாகிஸ்தான் படைகளுக்கு பொறுப்பாக இந்தியாவைச் சேர்ந்த 2 படைகளும், முக்தி பாஹினியைச் சேர்ந்த 2 படைகளும் நிறுத்தப்பட்டன. வங்கதேசத்தில் இருந்த மேற்கு பாகிஸ்தான் படைகள் நிபந்தனையின்றி சரண் அடைந்த விவகாரத்தை இந்திய பிரதமர் இந்திரா காந்தி அன்று இரவு தேசிய அளவிலான ரேடியோ ஒலிபரப்பின்போது தெரிவித்தார்.

மேலும், வங்கதேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் தனது நாட்டு மக்கள்தந்த இடத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் இந்திரா காந்தி நம்பிக்கை தெரிவித்தார். மற்ற நாடுகளும் வங்கதேசத்தை புதிய நாடாக அங்கீகரிக்கும் என்றும் அப்போது அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே நிபந்தனையின்றியும், முறையாக சரண் அடையாமல் இருக்கவும் வங்கதேசத்தில் இருந்த பாகிஸ்தான்ஜெனரல் நியாஸி முயற்சி மேற்கொண்டார். ஆனால், இந்திய ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் மானெக் ஷா இதை ஏற்கவில்லை. நிபந்தனையின்றி வங்கதேசத்தில் உள்ள மேற்குபாகிஸ்தான் படைகள் சரண் அடையவேண்டும் என்றும், ஜெனீவா மாநாட்டில் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி நாட்டில் உள்ள சரண் அடைந்த ராணுவ வீரர்களும், பொதுமக்களும் சரிசமமாக நடத்தப்படுவார்கள் என்றும் மானெக் ஷா அறிவித்தார்.

வங்கதேசத்தில் இந்தியா, முக்திபாஹினி படைகளிடம் மேற்கு பாகிஸ்தான் படைகள் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும் முடிவெடுக்கும் உரிமையை சம்பந்தப்பட்ட அரசுகள் எடுப்பதற்கு வழிவிட வேண்டும் என்றும் நியாஸியிடம் தெரிவிக்கப்பட்டது.

ஒப்பந்தத்தில் நியாஸி கையெழுத்திட்டதால் வங்கதேசத்தில் உள்ள பாகிஸ்தானுக்குச் சொந்தமான ராணுவ, கடற்படை, விமானப் படைகள், துணை ராணுவப் படைகள், சிவில் ராணுவப் படைகளை கைப்பற்றிக் கொள்வதற்கு வழிவகை ஏற்பட்டது. இதனிடையே, கிழக்கு பாகிஸ்தானில் இருந்த மேற்குபாகிஸ்தான் படைகளுக்கான ஜெனரல் நியாஸியின் சரண் ஒப்பந்தத்தை, அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் வாசித்தார்.

மேற்கு பாகிஸ்தான் ராணுவப் படைகளின் பொறுப்பாளரான ஜெனரல் நியாஸி கொடுத்த தகவல் டாக்காவிலிருந்து மாலை 5 மணிக்கு டெல்லியில் உள்ள ஜெனரல் மானெக் ஷாவுக்குஅனுப்பட்டது. ஜெனரல் மானெக் ஷாவின் செய்தி இரவு 8 மணிக்குக் கிடைத்தது.

நேரடி தொலைத்தொடர்பு வசதிக்காககிழக்கு ராணுவ கமாண்ட் அலுவலகத்திலிருந்து மைக்ரோ-வேவ் ரேடியோதொடர்பு ஏற்படுத்தப்பட்டு கல்கத்தாவிலிருந்து டாக்காவுக்கு தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காலை 9 மணிமுதல் பகல் 3 மணி வரை குண்டு போடுவதை நிறுத்த வேண்டும் என்று நியாஸி கேட்டுக் கொண்ட தகவல் ஜெனரல் மானெக் ஷாவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து விமானம் மூலமும், தரையிலிருந்தும் குண்டு போடுவது பிற்பகல் வரை நிறுத்தப்பட்டது.

பின்னர், கிழக்கு கமாண்ட் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஜே.எஃப்,ஆர். ஜேக்கப் ஹெலிகாப்டர் மூலம் பகல் 1 மணிக்கு டாக்காவை அடைந்தார். பகல் 2.45 மணிக்கு அவர் ஜெனரல் அரோராவைச் சந்தித்து தகவல்களைப் பெற்றார். இதைத் தொடர்ந்து சரண் அடைவதற்கான பணிகள் தொடங்கின.

சரண் அடையும் பணிகள் தொடங்கியவுடன் மாலை 4.31 மணிக்கு அகர்தலாவிலிருந்து நியாஸி வந்து சேர்ந்தார். அதற்கு முன்னதாகவே பாகிஸ்தானைச் சேர்ந்த 2 மேஜர் ஜெனரல்கள் (9, 36-வது டிவிஷன்களுக்கு பொறுப்பேற்று இருந்தவர்கள்) சரண் அடைந்தனர்.

இதனிடையே கிழக்கு பாகிஸ்தானில் இருக்கும் கடைசி பாகிஸ்தான் வீரர் சாகும்வரை போராட்டம் நடத்தலாம் என்று அதிபர் யாஹ்யா கான், பர்மான் அலிக்குத் தகவல் அனுப்பியிருந்தார்.

ஆனால் 2-வது தகவல், ஜெனரல் நியாஸியிடமிருந்து வந்தது. அதில் மேற்கு பாகிஸ்தானிலிருந்து விமானங்கள் வந்து போரிட்டாலும் இந்த போரைநடத்துவது வீண் என்று தகவல் அனுப்பப்பட்டது. 3-வது நபரின் தலையீடு வேண்டாம் என்று நினைத்ததால் டாக்காவுக்கும், கல்கத்தாவுக்கும் நேரடியாக ரேடியோ தகவல் தொடர்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ஜெனரல் நியாஸியிடம் எவ்வளவு விரைவில் பேசி முடிவு எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவில் முடிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.

வங்கதேச நாட்டின் சுதந்திரத்துக்காக இந்திய ராணுவம் தனது 1,000 வீரர்களை இழந்தது. போரின்போது சுமார் 2,800 இந்திய வீரர்கள் காயமடைந்தனர். சுமார் 100 பேர் வரை மாயமாயினர். வங்கதேச சுதந்திரத்துக்காக இன்னுயிரை ஈந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை வங்கதேச மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள். இந்தியஅரசின் சார்பாகவும், இந்திய மக்களின் சார்பாகவும் அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், போரில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x