

புதுடெல்லி: கரோனா தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொண்ட சிரமங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தர்பார் மகிளாசமன்வய கமிட்டி என்ற அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. நாட்டில் உள்ள 9 லட்சம் பெண் மற்றும் திருநங்கை பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அடையாள ஆவணங்களைக் கேட்காமல் பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென மாநில அரசுகளுக்கு கடந்த ஆண்டுசெப். 29-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்குநேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டைகள், அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு 2011-ம் ஆண்டே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், அந்த உத்தரவுநிறைவேற்றப்படவில்லை.
பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டைகள் வழங்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தொடங்க வேண்டும். அடையாள அட்டைகளைத் தயாரிக்கும்போது அவர்களின் அடையாளம் தொடர்பாக ரகசியம் காக்கப்பட வேண் டும். இதுதொடர்பான கள அறிக்கை4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். அதற்கிடையே, முந்தைய உத்தரவில் குறிப்பிட்டபடி, பாலியல் தொழிலாளர்களின் அடையாள ஆவணங்களைக் கேட்காமல்அவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்குவதை மாநில அரசுகள் தொடர வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.