

லுதியானா: பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, ஹர்பஜன் சிங்குடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து அம்மாநில அரசியல் வட்டாரத்தில் அதை பேசுபொருள் ஆக்கியுள்ளார்.
அந்தப் புகைப்படத்திற்கு அவர் இட்டுள்ள தலைப்பில், சாத்தியங்களுக்கான புகைப்படம் என்று சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார். ஹர்பஜன் சிங்கை தி ஷைனிங் ஸ்டார் (மின்னும் நட்சத்திரம்) என்று பாராட்டிப் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தால் ஹர்பஜன் சிங் காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன.
பஞ்சாப் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில் ஹர்பஜன் சிங்கை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.
ஏற்கெனவே கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் கோட்டையான அமிர்தசரஸில் ஹர்பஜன் சிங்கை நிறுத்த பாஜக முயற்சித்தது. அப்போது, ஹர்பஜன் பாஜகவில் இணைகிறார் என்றெல்லாம் தகவல்கள் பரவின. இதனை ஒரே ஒரு ட்வீட் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்தார் ஹர்பஜன். போலி செய்தி என்று மட்டும் குறிப்பிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், அரசியலில் தேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு அப்படியொரு திட்டம் இல்லை என்றும் கூறினார். இந்நிலையில், இப்போது பஞ்சாப் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து, ஹர்பஜன் சிங்குடன் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து அம்மாநில அரசியல் வட்டாரத்தில் அதை பேசுபொருள் ஆக்கியுள்ளார்.
காங்கிரஸோ, பாஜகவோ ஹர்பஜன் எந்தக் கட்சியில் இணைந்தாலும் அவரால் அந்தக் கட்சி பலனடையும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.