

புதுடெல்லி: குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தேசத்திற்கு வருண் சிங் ஆற்றிய அரும்பெரும் சேவையை இந்த நாடு என்றும் மறக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 8 ஆம் தேதி நீலகிரி மாவட்ட குன்னூரில் காட்டேரி எனும் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 வீரர்கள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் பிழைத்தார். அவருக்கு 80% தீக்காயங்கள் ஏற்பட்டன. சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் இன்ற காலை காலமானதாக விமானப் படை அறிவித்துள்ளது.
குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘‘அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றிய அரும்பெரும் சேவையை இந்த நாடு என்றும் மறக்காது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கல்’’ எனக் கூறியுள்ளார்.
குரூப் கேப்டன் வருண் சிங்கின் மறைவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘விமானப்படை குரூப் கேப்டன் வருண் சிங்கின் மறைவை அறிந்து வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனை அடைந்தேன். அவர் தனது கடைசி மூச்சு வரை போராடிய உண்மையான போராளி’’ எனக் கூறியுள்ளார்.