2020-21 நிதியாண்டில் வங்கிகள் ரூ.2.02 லட்சம் கோடி கடன் தள்ளுபடி; கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ரூ.10.7 லட்சம் கோடி தள்ளுபடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: 2020-21ஆம் நிதியாண்டில் வங்கிகள் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 781 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளன. இதில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் ரூ.10.70 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஆங்கில நாளேடு ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ரிசர்வ் வங்கியிடம் கடந்த நிதியாண்டில் கடன் தள்ளுபடி குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகமாக இருந்த கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் வங்கிகள் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 781 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளன. இதில் கடந்த10 ஆண்டுகளில் மட்டும் ரூ.11 லட்சத்து 68 ஆயிரத்து 95 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பகுதி கடந்த 7 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டவை. அதாவது, 2014-15ஆம் நிதியாண்டில் இருந்து ரூ.10.72 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக வாராக்கடன் என்பது, வங்கிகள் சார்பில் கடனை வசூலிக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்தபின் வசூலிக்க முடியாத சூழலில் அதை வாராக்கடனாக அறிவிக்கும். வங்கிகள் கடனைத் தள்ளுபடி செய்த பின்பும், கடன் வசூலிப்புப் பணிகளைத் தொடர முடியும்.

ஆனால், இதுவரை கடன் தள்ளுபடி பட்டியலையும், கடன் வாங்கியவர்கள் பெயரையும் வங்கிகள் வெளியிடவில்லை. கடந்த 2019-20ஆம் நிதி ஆண்டில் வங்கிகள் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 170 கோடி தள்ளுபடி செய்தன. 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.2 லட்சத்து 36 ஆயிரத்து 265 கோடியும், 2017-18ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 328 கோடியும், 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 373 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டன.

2020-21ஆம் நிதியாண்டில் 5 வங்கிகள் சேர்ந்து ரூ.89 ஆயிரத்து 686 கோடி கடன் தொகையைத் தள்ளுபடி செய்துள்ளன. இதில் எஸ்பிஐ வங்கி மட்டும் கடந்த நிதியாண்டில் ரூ.34 ஆயிரத்து 402 கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது.

யூனியன் வங்கி ரூ.16 ஆயிரத்து 983 கோடி கடனையும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.15 ஆயிரத்து 877 கோடியும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.14 ஆயிரத்து 782 கோடியும் கடனைத் தள்ளுபடி செய்துள்ளன.

வங்கிக் கடன் தள்ளுபடியில் 75 சதவீதம் பொதுத்துறை வங்கிகளில்தான் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வங்கிகள் தங்களின் கடன் ஆவணங்கள், பேலன்ஸ் ஷீட் போன்றவற்றில் சிக்கல் இல்லாமல் நிலுவை இல்லாமல் இருக்க ஒவ்வொரு ஆண்டும் இதைக் கடைப்பிடிக்கிறார்கள்.

கடன் தள்ளுபடி செய்யப்பட்டால், அது வாராக்கடன் ஆவணத்தில் இருந்தும், பதிவிலிருந்தும் நீக்கப்படும். இதனால் வங்கிகளுக்கு வாராக்கடன் அளவு குறைந்து, வரிச்சலுகை கிடைக்கும். ஆனால் வாராக்கடன் என்பது வங்கியின் பதிவில் இருக்கும் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in