மோடி அரசின் ஆண்டு இறுதிப் பரிசுகளை அனுபவியுங்கள்: வங்கிகளுக்கு ரூ.2.84 லட்சம் கோடி இழப்பு; ப.சிதம்பரம் கிண்டல்
புதுடெல்லி: மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு அளிக்கும் ஆண்டு இறுதிப் பரிசுகளான சில்லறை பணவீக்கம், வேலையின்மை விகிதம் அதிகரிப்பு போன்றவற்றை அனுபவிப்போம் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு கரோனா காலத்திலும் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் நாட்டின் பொருளாதாரத்தைக் கையாளும் விதத்தையும், வளர்ச்சி வீதத்தையும் முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று ட்விட்டரில் மோடி அரசு பொருளாதாரத்தைக் கையாள்வதைக் கிண்டல் செய்து கருத்துகளைப் பதிவிட்டிருந்தார். அதில், “மோடி அரசின் ஆண்டு இறுதிப் பரிசுகளை அனுபவிப்போம். சில்லறை பணவீக்கம் 4.91 சதவீதம், எரிபொருள் விலை 13.4 சதவீதம் உயர்வு, வேலையின்மை வீதம் 8.53 சதவீதமாக அதிகரிப்பு, நகர்ப்புறங்களில் வேலையின்மை வீதம் 10.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் வங்கிகளின் வாராக்கடன் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 783 கோடியாகும். இதில் பொதுத்துறை வங்கிகளில் மட்டும் ரூ.4 லட்சத்து 86 ஆயிரத்து 800 கோடி வாராக்கடன் இருக்கிறது. இதில் 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் நிலுவைத் தொகை ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 820 கோடியாகும். பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு மட்டும் ரூ.2 லட்சத்து 84 ஆயிரத்து 980 கோடியாகும்” என விமர்சித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மொத்தவிலைப் பணவீக்கம் 14.23 சதவீதமாக நவம்பர் மாதம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து 8-வது வாதமாக இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் உயர்ந்து வருகிறது.
ப.சிதம்பரம் மற்றொரு ட்விட்டர் கருத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்த வராமல் வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்றதைக் குறிப்பிட்டுள்ளார்.
ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நாடாளுமன்றத்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்குக் கடந்த 13-ம் தேதி அஞ்சலி செலுத்த நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அனைத்தையும் புறக்கணித்துவிட்டு வாரணாசிக்குச் சென்றுவிட்டார். மோடி! உங்களை வாரணாசி, அயோத்தியில்தான் பார்க்க முடியும், நாடாளுமன்றத்தில் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
