

2020-21-ம் ஆண்டுக்கு, மத்திய அரசு மாநிலங்களுக்கு ரூ.37,134 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு கடன்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் மக்களவையில் தெரிவித்தார்.
இதில், இவ்வாண்டு ஏப்ரல் – செப்டம்பருக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.14,664 கோடி ஆகும். கரோனா சூழல் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது என்றும், அதனால், மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகை அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்துக்கு ரூ.6,723 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.3,528 கோடி, குஜராத்துக்கு ரூ.3,145 கோடி, உத்தரப் பிரதேசத்துக்கு ரூ.3,125 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.2,894 கோடி அளவில் மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க கடன்பட்டுள்ளது.
பீஹார், சத்தீஸ்கர், கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு இவ்வாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் ஜிஎஸ்டி இழப்பீடாக எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதுக்குமாக ஒரே வரி முறையைக் கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி முறையை நடைமுறைப்படுத்தியது.
ஜிஎஸ்டி நடைமுறையால் மாநிலங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில், 2017 முதல் 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி நடைமுறையால மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும் என்று முடிவு எடுக்கப்பட்டது.