

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அரசியல் செல்வாக்கு தனக்கு உள்ளதாகக் கூறி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஏற்கெனவே அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவரை டெல்லி போலீஸார் கடந்த 2017-ல் கைது செய்து, திஹார் சிறையில் அடைத்தனர்.
அவர் மீது 21-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக டெல்லி அமலாக்கத் துறையினர் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், தொழிலதிபர் மனைவியிடம் பண மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட்நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பண மோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் உள்பட 6 பேர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுடன் நட்புஏற்பட மத்திய அமைச்சர் அமித்ஷாவின் போன் நம்பரை தவறாக பயன்படுத்தி உள்ளார். நடிகை ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் மினி ஹெலிகாப்டர், சொகுசு ரக பார்ஷே கார், ரோலக்ஸ் கடிகாரம் என பல கோடி மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளார்.
மேலும், அமெரிக்காவில் இருக்கும் அவரது சகோதரிக்குகடனாக பணம் அளித்துள்ளார். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் சுகேஷ் சந்திரசேகர் கூறிஇருந்தார். இவ்வாறு அமலாக் கத்துறை தெரிவித்துள்ளது.