

அயோத்தி, வாரணாசி முதல் வெளிநாடுகள் வரை கோயில்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்துபவராக உள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் முஸ்லிம் நாடுகளிலும் கோயில்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020 ஆகஸ்ட் 5-ல் நாட்டினார். இதன் அருகிலுள்ள வாரணாசியிலும் காசி விஸ்வநாதர் கோயில்புனரமைப்பின் ஒரு பகுதிப் பணிஅவரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியால் இக்கோயில்களுக்கான பணி மட்டுமல்ல, கடந்த 7 ஆண்டுகளில் மேலும் பல்வேறு கோயில்களுக்கானப் பணிகளை அவர் செய்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட்டில் தனது சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள சோம்நாத் கோயிலில் ரூ.80 கோடி செலவில் 3 வகையான பணிகளை தொடங்கி வைத்தார். இதன் முதல் திட்டமாக சோம்நாத்தில் பார்வதி மாதா கோயில் அமைப்பது.
இத்துடன் சோம்நாத் கோயிலுக்கான தரிசனப் பாதையையும் பிரதமர் மோடி அமைத்திருந்தார். ரூ.47 கோடி செலவிலான இத்திட்டத்தில் கோயில் தரிசனத்திற்கு பின் பக்தர்கள் அப்பாதையில்சென்று அருகிலுள்ள கடலையும் கண்டுரசிக்கலாம்.
சோம்நாத் அறக்கட்டளை சார்பில் ரூ.3 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட கோயில் வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். குஜராத் முதல்வரானது முதல் சோம்நாத் கோயில் பணிகளை அவர் செய்து வருகிறார்.
உத்தராகண்டிலுள்ள கேதார்நாத் கோயில் கடந்த 2013-ல் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் அதிக சேதம் அடைந்தது. இதையும் சீரமைக்கும் முயற்சிகளை, 2014-ல் பிரதமராக பதவியேற்றது முதல் மோடி மேற்கொண்டுள்ளார். ரூ.130 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட இக்கோயிலை திறந்து வைக்க ருத்ரபிரயாக்கிற்கு பிரதமர் மோடி கடந்த மாதம் சென்றிருந்தார். அப்போது, ருத்ரபிரயாக்கை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.180 கோடி செலவிலான பல திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
உத்தராகண்டில் ‘சார்தாம்’ எனப்படும் 4 முக்கியப் புனிதத்தலங்களை இணைக்கும் திட்டத்தையும் கடந்த 2016-ல் அவர் தொடங்கி வைத்தார். இத்திட்டம், இமயமலையில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ரூ.12 ஆயிரம் கோடிசெலவில் இந்த புனிதத் தலங்களுக்கு இடையிலான 889 கி.மீ. சாலை விரிவுபடுத்தப்படுகிறது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு அங்குள்ள பழமையான கோயில்களை புனரமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறைஇணை அமைச்சரான ஜி.கிஷன்ரெட்டி நாடாளுமன்றத்தில் பேசும்போது, “காஷ்மீரிலுள்ள சுமார் 50,000 பழமையான கோயில்கள் மூடப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் சீரமைத்து, மீண்டும் திறக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். இந்த வகையில், முதலாவதாக அங்குள்ள ரகுநாத் கோயில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இதனிடையே, வெளிநாடுகளிலும் அங்குள்ள இந்துக்களுக்காக புதிய கோயில்கள் அமைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி இறங்கினார். முஸ்லிம் நாடான அபுதாபியில் முதல் இந்து கோயிலுக்கான அடிக்கல்லை 2018-ல் நாட்டினார். அடுத்து 2019 ஆகஸ்ட்டில் பஹ்ரைனில் 200 ஆண்டுகள் பழமையான கிருஷ்ணர் கோயிலை புனரமைக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.